பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்ல தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் காத்திருந்த பயணிகள். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாகம்: சொந்த ஊர்களுக்கு பல லட்சம் மக்கள் பயணம்

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடுவதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சிறப்பு பேருந்து, ரயில்களில் புறப்பட்டு சென்றுள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என இது 4 நாள் திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் கடந்த 2 நாட்களாகவே பேருந்துகளிலும், ரயில்களிலும் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்ற வண்ணம் இருந்தனர்.

சென்னையில் இருந்து கடந்த 10-ம் தேதி முதல் பல ஊர்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று மாலை 5 மணி வரை மொத்தம் 14,492 பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்பேருந்துகளில் 7.30 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டு சென்றுள்ளனர்.

திருச்சி, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் பல லட்சம் மக்கள் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அதனால், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நேற்று அதிகம் இருந்தது. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் இடம் பிடிக்கபயணிகள் கூட்டம் அலைமோதியது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாலும், பொருட்கள் வாங்க சிறப்பு சந்தையில் ஏராளமானோர் குவிந்ததாலும் கோயம்பேடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சரிசெய்யும் பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

சூரியனின் திசை மாறும்உத்தராயண புண்ணிய காலமும் இன்று தொடங்குகிறது. இதையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

SCROLL FOR NEXT