தமிழகம்

ஜன.20-ம் தேதி நடைபெறுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்: நிதிநிலை அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என தகவல்

செய்திப்பிரிவு

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஜன.20-ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழக நிதிநிலை அறிக்கை, புதிய தொழில் திட்டங்களுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

மத்திய நிதிநிலை அறிக்கை பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஜன.31-ம் தேதி நாடாளுமன்ற கூட்டுக் கூட்டம் நடைபெறுகிறது. வழக்கமாக மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அடுத்த ஒரு மாதத்தில் தமிழகஅரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும்.

அந்த வகையில், இந்த ஆண்டுமார்ச் முதல் வாரத்தில் தமிழகஅரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், நிதிநிலை அறிக்கையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

நிறுவனங்களுக்கு அனுமதி

இதற்கிடையே தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தொழில் வழிகாட்டி மற்றும் ஒற்றைச்சாளர அனுமதி தொடர்பான கூட்டத்தில், ரூ.6 ஆயிரத்து 608 கோடி முதலீடு தொடர்பாக 15 நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதற்கு ஒப்புதல் பெறவும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக விவாதிக்கவும், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் தலைமையில் வரும் 20-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய குடியுரிமை பதிவேடு...

இக்கூட்டத்தில், இந்த நிதியாண்டு இறுதி வரையிலான பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒப்புதல், பதிவுக்கட்டணம் உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், சமீபத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்தமுஸ்லிம் அமைப்புகள், தேசியகுடியுரிமை பதிவேடு தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

SCROLL FOR NEXT