வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகியிடம் இருந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் கைப்பற்றியுள்ள உலோகத்தாலான சாமி சிலைகள். 
தமிழகம்

பாஜக பிரமுகரிடம் 8 உலோக சிலைகள் பறிமுதல்: பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என போலீஸார் தகவல்

செய்திப்பிரிவு

பாரதிய ஜனதா கட்சி பிரமுகரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 8 உலோக சாமி சிலைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் 1-ம் சேத்தி வடக்கு குத்தகை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்(42). பாஜக வேதாரண்யம் மேற்கு ஒன்றியச் செயலாளர். இவரது நண்பர் பைரவசுந்தரம்(40). இவர்கள் 2 பேரும் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வேதாரண்யம் பேருந்து நிலையத்தில்நின்றிருந்தனர். அப்போது ரகசிய தகவலின்பேரில், அங்கு வந்த சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸார் அவர்கள் 2 பேரையும் பிடித்து, அவர்களிடம் இருந்த ஒன்றரை அடி உயரமுள்ள உலோக அம்மன் சிலையை பறிமுதல் செய்தனர்.

பின்னர், அவர்களை சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத் தினர். விசாரணையில், அம்மன் சிலையை ரூ.1.20 கோடிக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரியவந்தது. செல்வம் தனது வீட்டில் மேலும் சிலைகள் இருப்பதாக கூறியதை அடுத்து, அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 நடராஜர் சிலைகள் உட்பட 7 சாமி சிலைகளையும், ஒரு பீடத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து செல்வம், பைரவநாதன் ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக, மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கைப்பற்றப்பட்ட 8 சிலை களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT