தமிழகம்

ரஜினி சொன்ன பால்காரன் கதை: பத்திரிகையாளர்கள் மனசாட்சிப்படி செய்தி போடுங்கள்- ரஜினி அட்வைஸ்

செய்திப்பிரிவு

பத்திரிகைகள் பொய்யை உண்மையாக்காதீர்கள், உங்களுக்கு கடமை இருக்கிறது என்று ரஜினி துக்ளக் விழாவில் பேசினார்

இன்று மிகப்பெரிய கடமை இருக்கு. சில ஊடகங்கள் சில டிவி சானல்கள் அவர்கள் சார்ந்திருக்கிற கட்சிக்காக என்ன தப்பு செய்தாலும் எழுதத்தான் செய்வார்கள். ஆனால் நடுநிலையில் இருக்கும் பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள், சானல்கள் மனசாட்சிப்படி மக்களுக்கு எது நல்லது, எது நியாயம், எது மக்களுக்கு தேவைன்னு வந்து அவர்கள் வெளியில் வந்து சொல்லணும்.

நடுநிலைவாதிகள், முக்கியமாக விமர்சகர்கள் இது மிகமிக முக்கியமான விஷயம். செய்தி என்பது பால் மாதிரி. பாலில் பொய் என்கிற தண்ணீரை கலந்துவிடுவார்கள்.

அதில் பாலில் எது தண்ணீர் எது பால் என்று பத்திரிகையாளர்கள் நீங்கள் தான் பிரித்துச் சொல்லணும். அதாவது பால பாலா பிரிச்சுடணும், தண்ணீரை தண்ணீராக பிரிச்சுடணும். மக்களுக்கு உண்மை எது என்று சொல்லணும்.

ஒரு கிராமத்தில் ஒருத்தர் தண்ணீர் கலக்காமல் நேர்மையாக ஒரு லிட்டர் பாலை பத்து ரூபாய்க்கு விற்றார். நல்லவராக இருந்தால்தான் வாழ விட மாட்டார்களே. இன்னொருவன் கிளம்பினான் அவன் சிறிது தண்ணீர் கலந்து பாலை விலை குறைவாக 8 ரூபாய்க்கு விற்றான்.

இன்னொருத்தன் 6 ரூபாய்க்கு அதிக தண்ணீரை கலந்து பால் விற்றான், நல்ல லாபம் கிடைத்தது.
மக்கள் அவர்களை நோக்கி சென்றார்கள். ஆனால் பத்து ரூபாய்க்கு பால் விற்றவர் வியாபாரம் சரி இல்லை, ஆனால் அவர் வியாபாரத்தை தொடர்ந்துச் செய்தார். அவருக்கு என்று சில வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். ஒரு நாள் ஊரில் திருவிழா வந்தது.

அனைவரும் 6 ரூபாய், 8 ரூபாய் பால் கடைகளை நோக்கி படையெடுத்தார்கள். பால் விற்றுத்தீர்த்து விட்டது. பின்னர் அனைவரும் பத்துரூபாய் பால் விற்பவரை நோக்கிச் சென்றார்கள். அவரது பாலை வாங்கி பட்சணம் உள்ளிட்ட பல உணவுப்பொருட்களை தயாரித்தார்கள்.

அவை அவ்வளவு ருசியாக இருந்தது. இந்தப்பாலில் மட்டும் என்ன இவ்வளவு சிறப்பு என்று அவரிடம் சென்று வாங்க ஆரம்பித்தார்கள். அவர் பாலில் தண்ணீர் கலக்காமல் விற்றார் மக்கள் அவரை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மற்ற பால்காரர்கள் ஒன்றுமில்லாமல் போனார்கள்.

அதைத்தான் சொல்கிறேன் பத்திரிகைகள் நீங்கள் தயவு செய்து பொய்யை உண்மையாக்காதீர்கள். மிகமிக பொறுப்பில் இருக்கிறீர்கள் பத்திரிகையாளர்கள் நீங்கள். துக்ளக் பத்திரிகையின் 50 வது ஆண்டுவிழாவில் கலந்துக்கொள்வதில் பெருமையாக இருக்கிறது”.

இவ்வாறு ரஜினி பேசினார்.

SCROLL FOR NEXT