தமிழகம்

முரசொலி கையில் வைத்திருந்தால் அவர் திமுககாரர், துக்ளக் வைத்திருந்தால் அவர் அறிவாளி: துக்ளக் விழாவில் ரஜினி பேச்சு

செய்திப்பிரிவு

துக்ளக் பத்திரிக்கையின் 50வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் துக்ளக் பத்திரிக்கையின் பெருமைகளை பேசினார். முரசொலியை கையில் வைத்திருந்தால் அவர் திமுககாரர் துக்ளக்கை கையில் வைத்திருந்தால் அவர் அறிவாளி என்று பரபரப்பாக பேசினார்.

விழாவில் அவர் பேசியதாவது:

மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய துணை ஜனாதிபதி அவர்களே, துகளக் வாசகர்கள், மீடியா நண்பர்கள் , அனைவருக்கும் நன்றி. துணை ஜனாதிபதி இந்த அளவுக்கு வந்துள்ளார் என்றால் அவர் செய்துள்ள தியாகம் கொஞ்சம் நஞ்சமல்ல. அவர் படிக்கிற காலத்தில் ஆந்திராவில் 100, 200 பேர் கட்சியில் இருந்திருப்பார்கள். அப்படி பாடுபட்டு மிக உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார். கட்சியின் அகில இந்திய தலைவராக உயர்ந்தார்.

அமைச்சராக, இன்று துணை ஜனாதிபதியாக உயர்ந்து நிற்கிறார். அதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. ஆனால் அவர் இவ்வளவு சீக்கிரம் துணை ஜனாதிபதியாகி இருக்கக்கூடாது என்பது எங்கள் எண்ணம். காரணம் அந்தப்பதவிக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது. அவர் இன்னும் பலகாலம் மக்கள் பணி செய்து பின்னர் துணை ஜனாதிபதி ஆகியிருக்கணும்.

காரணம் அவர் இருக்கும் இடத்தில் சில கட்டுப்பாடுகள் உள்ளது. மக்களுக்கான நேரடி பணியில் ஈடுபட முடியாது. அதேப்போன்று அவர் இருக்கும் இடத்தில் அரசியல் பேச முடியாது. சில கட்டுப்பாடுகள் உள்ளது. இங்கு வாசகர் கேட்ட கேள்விக்கு ரஜினி பதிலளிப்பார் என்றார்கள், பேசுவதற்கு இங்கு சுதந்திரம் இல்லை, பேசும்போது பேசுகிறேன், தற்போது இங்குள்ள நிலைக்கு கட்டுப்பட்டு நான் பேசுகிறேன்.

சோ சார் ஒரு ஜீனியஸ், ஜீனியஸ்கள் வளர்ப்பால் உருவாவதில்லை, அவர்கள் ஜீனியஸாக பிறப்பார்கள். அவர்களை அடையாளப்படுத்த நாளாகும். அவர்கள் துறைகளை தேர்வு செய்வார்கள். அதற்கு காலமாகும் ஆனால் செயல்படுத்தி சாதிப்பார்கள். அப்படி ஒரு ஜீனியஸ்தான் சோ. அவர் எடுத்த துறை பத்திரிக்கைத்துறை. அதில் அவர் எழுதிய அரசியல், நையாண்டி என ஒரு துக்ளக் இனத்தையே உருவாக்கினார். முரசொலி வைத்திருந்தால் அவன் திமுககாரர் துக்ளக் வைத்திருந்தால் அவன் அறிவாளி.

துக்ளக் வைத்திருந்ததால் அவர் அறிவாளி ஆனாரா? அல்லது படித்ததால் ஆனாரா? என்பது தெரியவில்லை.

இவ்வாறு ரஜினி பேசினார்.

SCROLL FOR NEXT