சிஏஏ, என்சிஆர் குறித்து மேலும் மேலும் கேள்வி எழுப்பி பதற்றத்தை ஏற்படுத்துவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில், இன்று (ஜன.14) செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
தமிழக எல்லைப்பகுதிகளை தீவிரவாத அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
கடல் வழியாகவும் தரை வழியாகவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இதை சிலர் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மறைமுகத் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறாரே?
என் சொந்த மாவட்டமான சேலத்திலேயே எந்தவித தவறுகளும் நடைபெறவில்லை. சேலம் மாவட்டத்தில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்ட அதிமுகவினர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தனர். இந்த தேர்தல் நியாயமாக, முறையாக நடந்திருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் தான் வாக்குகளை எண்ணுகின்றனர். வாக்கு எண்ணிக்கையின் போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்திருந்தது. தடுப்புகள் அமைக்கப்பட்டு அதற்கு வெளியே முகவர்கள் இருக்கின்றனர். எண்ணப்பட்ட வாக்குகளை அவ்வப்போது முகவர்களிடம் அதிகாரிகள் காண்பிக்கின்றனர். எனவே இதில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை. குறை சொல்ல வேண்டும் என்பதற்காக குறை சொல்கின்றனர்.
அரசு அதிகாரிகள் நடுநிலைமையுடன் செயல்பட்டனர். இரு நாட்களாக வாக்குகள் எண்ணப்பட்டன. அரசு அதிகாரிகள் நின்று கொண்டே வாக்குகளை எண்ணினர். முகவர்களின் சந்தேகங்களை அவ்வப்போது அதிகாரிகள் தீர்த்து வைத்தனர். அதனால் தான் காலதாமதம் ஏற்பட்டது. வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அதிமுக இத்தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றுள்ளது.
என்ஆர்சி, என்பிஆர் முஸ்லிம்களுக்கு எதிரானது என குற்றச்சாட்டு உள்ளதே?
என்பிஆர், என்ஆர்சி இரண்டும் வெவ்வேறானவை. தமிழகத்தைப் பொருத்தவரை எந்த சிறுபான்மையின மக்களும் பாதிக்கப்பட மாட்டார்கள். இதனை பிரதமரும் தெளிவுபடுத்தியிருக்கின்றார். சிறுபான்மையின மக்களை அச்சப்படுத்தும் வகையில் அரசியல் லாபத்துக்காக சில எதிர்க்கட்சிகள் இவ்வாறான அவதூறு செய்திகளை பரப்புகின்றன. தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை. அவதூறான செய்திகளை நம்ப வேண்டாம்.
குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கான ஆதரவை பாஜக கூட்டணியில் உள்ள பிஹார் முதல்வரே மறுபரிசீலனை செய்துள்ளாரே?
பிரச்சினை இருந்தால் பரவாயில்லை. பிரச்சினையே இல்லாமல் எப்படி பதில் சொல்வது? இதுகுறித்து மேலும் கேள்விகளை எழுப்புவது பதற்றத்தை ஏற்படுத்தும்.
அன்வர் ராஜா இந்த விஷயத்தில் அதிமுகவுக்கு முரண்பாடான கருத்துகளை தெரிவித்துள்ளாரே?
தவறான கருத்துகளை அதிமுகவினர் ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் எனவும், எல்லா பிரச்சினைகளிலும் தலைமைதான் முடிவெடுக்கும் எனவும் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சி நீடிக்க பாமக தான் காரணம் என அன்புமணி கூறியுள்ளாரே?
அன்புமணி எங்கும் அதிமுகவை விமர்சிக்கவில்லை. அந்தந்த கட்சி தொண்டர்களை ஊக்குவிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் சில இடங்களை கூட்டணிக்கு விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் போது தொண்டர்கள் சோர்வடைகின்றனர். அந்த சோர்வைப் போக்க அன்புமணி இவ்வாறு பேசியிருப்பார்.
பொங்கல் விடுமுறையில் நாடாளுமன்ற ஆட்சிமொழிக்குழு ஆய்வு நடத்த உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதே?
எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. நாளையிலிருந்து விடுமுறை தான். அரசுக்கு இடையூறு செய்வதற்காக தவறான செய்திகளை ஸ்டாலின் பரப்புகிறார்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.