இல.கணேசன்: கோப்புப்படம் 
தமிழகம்

கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸை விட்டு விலகுவது திமுகவுக்கு நல்லது: இல.கணேசன்

செய்திப்பிரிவு

கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸை விட்டு விலகுவது திமுகவுக்கு நல்லது என, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் பதவிகளை பகிர்ந்துகொள்வதில் திமுக - காங்கிரஸ் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'உள்ளாட்சித் தேர்தலில் போதிய இடங்களை திமுக வழங்கவில்லை. இது கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது' எனக் கூறியிருந்தார்.

கே.எஸ்.அழகிரியின் இந்த அறிக்கை இரு கட்சிகளுக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், சென்னையில், இன்று (ஜன.14) பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், "இது திமுக - காங்கிரஸ் இரு கட்சிகளுக்கிடையேயான பிரச்சினை. இருந்தாலும், தமிழகத்தில் காங்கிரஸ் என்பது இல்லை. அது சரிந்து கொண்டிருக்கும் கட்சி. ஏதோ கூட்டணி தயவால் கொஞ்சம் மேலே வருவதற்கு காங்கிரஸ் முயற்சிக்கிறது.

கூட்டணி பலத்தால் கொஞ்சம் இடங்களில் வெற்றி பெற்ற பிறகு, காங்கிரஸில் உள்ள யாரோ ஒருவர் இப்படி பேசியிருந்தால் பரவாயில்லை. காங்கிரஸ் தலைவரே திமுக கூட்டணி குறித்து விமர்சித்ததால், அதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என திமுக கூறியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸை விட்டு விலகுவது திமுகவுக்கும் நல்லது" என இல.கணேசன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT