விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விதவிதமான கயிறுகள், சலங்கைகள் உள்ளிட்டவை 
தமிழகம்

மாட்டுப் பொங்கலை உற்சாகமாக கொண்டாட தயாராகும் விவசாயிகள்

எஸ்.விஜயகுமார்

கடந்த 2017-ம் ஆண்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக நாட்டு பசுக்கள், நாட்டு காளைகள், ஜல்லிக்கட்டு காளைகள், நாட்டுக்கோழிகள், சண்டைச் சேவல்கள் உள்ளிட்ட நாட்டு இனங்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மக்களிடையே பெரிய அளவிலான விழிப்புணர்வு ஏற்பட்டது.

இதன் காரணமாக நாட்டு மாடுகளை வளர்ப்போர் எண்ணிக்கை, ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போர் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதேபோல் விவசாயிகளால் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த மாட்டுப்பொங்கல் தற்போது பொதுமக்களாலும் ஆர்வமுடன் கொண்டாடப்படுகிறது.

நாளை மறுதினம் (ஜன.16) மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் பசு மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், ஆடுகள், சண்டை சேவல்கள் போன்றவற்றுக்கு தேவையான கயிறுகள், கழுத்து மணிகள், தாம்பு கயிறுகள், மூக்கணாங்கயிறு சலங்கைகள், நெற்றிக் கயிறு, கோழி கயிறு உள்ளிட்டவை கடைகளில் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகள், சண்டை சேவல்கள், ஆடுகள் ஆகியவற்றுக்கு தேவையான விதவிதமான பல வண்ணங்களிலான கயிறுகள் சிறியதும் பெரியதுமான சலங்கைகள், கழுத்து மணிகள் போன்றவை ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மாடுகளுக்கான சலங்கைகள் ரூ.50 முதல் ரூ.200 வரையிலும் மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு உள்ளிட்டவை ரூ.20 முதல் ரூ.300 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான கயிறுகள் ரூ.700 விலையிலும் சண்டை சேவல்களுக்கான கயிறு ரூ.150 முதல் ரூ.200 வரையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சண்முகம் என்பவர் கூறுகையில், "ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பின் மாட்டுப் பொங்கலுக்கு, மாடுகளுக்கான சலங்கைகள், கயிறுகள், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தேவையான கயிறுகளும் அதிக அளவில் விற்பனையாகின்றன இதேபோல் சண்டை சேவல்களுக்கான கயிறுகளும் பலரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றன' என்று கூறினார்.

SCROLL FOR NEXT