திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் என, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் பதவிகளை பகிர்ந்துகொள்வதில் திமுக - காங்கிரஸ் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கடந்த 10-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், 'உள்ளாட்சித் தேர்தலில் போதிய இடங்களை திமுக வழங்கவில்லை. இது கூட்டணி தர்மத்துக்கு புறம்பானது' எனக் கூறியிருந்தார்.
மறைமுகத் தேர்தல் நடப்பதற்கு முந்தைய நாளில் வெளியான இந்த அறிக்கை திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும், சில இடங்களில் அதிமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் வாக்களித்தால் திமுக வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டது. குறிப்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியில் அதிக இடங்களை திமுக கூட்டணி பெற்றிருந்தும் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இன்று (ஜன.13) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, கே.எஸ்.அழகிரி நேரில் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
உங்களின் அறிக்கையால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் கசப்பு ஏற்பட்டுள்ளதா?
அதிக கற்பனையில் இருக்கிறீர்கள். என்னுடைய அறிக்கை கூட்டணி உறவை பாதிக்காது. இரு கட்சிகளுக்கும் இடையே எந்தவிதமான கசப்பும் இல்லை.
அந்தமானில் காங்கிரஸின் வெற்றிக்கு திமுக தான் காரணம் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளாரே?
ஒரு வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகளும் காரணம்தான். கூட்டணி கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் அத்தனை இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க முடியாது. எங்களின் கூட்டணி நல்ல பாதையில் செல்லுமே தவிர தவறான பாதையில் செல்லாது.
நீங்கள் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பு தேசிய தலைமையிடம் கலந்தாலோசித்தீர்களா?
நானே ஒரு தலைவர். அறிக்கை வெளியிடக்கூடாதா? நான் வெளியிட்ட அறிக்கை உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸின் நிலையை மட்டும் தான் உணர்த்தியது. அது திமுகவுக்கு எதிரானது அல்ல. காங்கிரஸும் திமுகவும் இணைந்த கரங்கள். எங்கள் இணைப்புக்குக் காரணம் கொள்கைதான். எங்களது உயர்ந்த கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.