அமைச்சர் ஜெயக்குமார் - பொன்.ராதாகிருஷ்ணன்: கோப்புப்படம் 
தமிழகம்

விரக்தியின் உச்சத்தில் தமிழக அரசை குறை சொல்கிறார்: பொன்.ராதாகிருஷ்ணன் மீது அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

செய்திப்பிரிவு

பொன்.ராதாகிருஷ்ணன் விரக்தியின் உச்சத்தில் தமிழக அரசை குற்றம்சாட்டுவதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை, சைதாப்பேட்டையில் இன்று (ஜன.14) அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பொங்கல் பரிசு பலருக்கும் வழங்கப்படாதது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இதுவரை கிட்டத்தட்ட 1 கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசை பெறுவதற்கான கால அவகாசம் வரும் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதையடுத்து, தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என, பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நன்றாக இருந்த மனிதர் ஏன் இப்படி ஆகி விட்டார் என தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்தே அதிமுக அரசை குறை சொல்வதை வாடிக்கையாகவும் வேடிக்கையாகவும் வைத்திருக்கிறார். அவர் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. இதனை பாஜகவின் கருத்தாக நாங்கள் நினைக்கவில்லை.

மத்திய இணையமைச்சராக அவர் இருந்த சமயத்தில் தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்? முதல்வர், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து பிரதமர், அமைச்சர்களை சந்தித்திருக்கிறார். எல்லா வளங்களும் பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. விருதுகளையும் பெற்றிருக்கிறோம்.

சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, சாதி - மத வேறுபாடு இல்லாதது ஆகியவற்றுக்காக தமிழகத்திற்கு அங்கீகாரம் கொடுத்தது மத்திய அரசு. அதிக மதிப்பெண்களை மத்திய அரசு கொடுத்தது. அப்படியென்றால் மத்திய அரசை எதிர்த்து அவர் குற்றம்சாட்டுகிறாரா?

அவர் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு எவ்வளவோ திட்டங்களை கொண்டு வந்திருக்கலாம். ஆனால், ஒரு திட்டத்தைக் கூட அவரால் கொண்டு வர முடியவில்லை. விமான நிலையத்தில் நின்று பேட்டி மட்டும்தான் கொடுப்பார்.

விரக்தியின் உச்சத்தில் அவர் பேசுகிறார். அவருக்கு தமிழக பாஜகவில் தலைவர் பதவி கொடுக்கிறார்களா இல்லையா என்பதை அவர் கட்சியைத்தான் கேட்க வேண்டும். நான் ஜோதிடம் சொல்ல முடியாது. எங்கேயோ இருக்கும் கோபத்தை எங்கள் மீது காட்ட வேண்டியதன் அவசியம் என்ன? அவர் கருத்தை விரக்தியின் வடிவமாக பார்க்கிறோம். மத்திய அரசின் கருத்தாக எடுக்கவில்லை.

திமுக ஆட்சியில் தீவிரவாதம் தலைதூக்கி இருந்தது. போராளிகள் சென்னையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை. முஸ்லிம்களை கைது செய்தனர். மசூதிக்கு உள்ளே சென்று அராஜகங்களை நடத்தினர்.

ஆனால், இப்போது, பாபர் மசூதி பிரச்சினை நடந்த போது கூட தமிழகத்தில் பிரச்சினை இல்லை. அதிமுக ஆட்சியில் தீவிரவாதம் தலைதூக்காது. வேரோடு வீழ்த்திவிடுவோம். தீவிரவாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் தமிழ்நாட்டில் இடம் கிடையாது. அவற்றை ஊக்கப்படுத்துவது திமுக தான்"

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT