எஸ்.பி.ஐ வேலைவாய்ப்பு அறிவிக்கையில் அடிப்படை கல்வித் தகுதி தொடர்பான குழப்பத்தை நீக்கும்படி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக எஸ்.பி.ஐ அதிகாரிகளுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில்,
பாரத ஸ்டேட் வங்கி சார்பாக கடந்த 3-ம் தேதி (ஜனவரி 3- 2020) அன்று ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிக்கை (No. CRPD/CR/2019-20/20) ஒன்றை பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிக்கையில் "அடிப்படை கல்வித் தகுதி என்ற குறிப்பில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் ஏதேனும் ஒன்றில் இருந்தோ அல்லது அதற்கு நிகரான மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்திலிருந்தோ பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒருங்கிணைந்த இரட்டை பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தாங்கள் தேர்வில் தேறிய நாள் 01.01.2020-ஐ கடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கல்லூரி கடைசி பருவத்திலோ கடைசி ஆண்டிலோ இருப்பவர்களும் தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம். ஒருவேளை தேர்வு செய்யப்பட்டால் தாங்கள் 01.01.2020 அன்றைய தேதிப்படி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரங்களை அளிக்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிக்கையின்படி ஏற்கெனவே பட்டம் பெற்றவர்களுக்கும் தற்போது கல்லூரி இறுதி ஆண்டில் இருப்பவர்களுக்கும் பட்டம் பெற்ற ஆண்டு ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பில்லை. இறுதி செமஸ்டர் தேர்வு மே மாதம் தான் நடைபெறும் என்ற பட்சத்தில் இந்த அடிப்படை கல்வித் தகுதி வரம்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இது விளம்பரத்தில் ஏற்பட்ட தவறு என்றே நான் கருதுகிறேன். எனவே இதனை உடனே கவனத்தில் கொண்டு சரி செய்யுமாறு வேண்டுகிறேன். இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி உண்மையிலேயே இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்குத் தடையாக அமைந்துவிடும்.
வங்கி அதிகாரிகள் இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண கோருகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.