பொள்ளாச்சி அடுத்த கோபாலபுரம் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ள துப்பாக்கி ஏந்திய போலீஸார். படம்: எஸ்.கோபு 
தமிழகம்

எஸ்.ஐ வில்சன் கொலையாளிகளை பிடிக்க தீவிரம்: பொள்ளாச்சி சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் வாகன தணிக்கை

செய்திப்பிரிவு

எஸ்.ஐ வில்சன் கொலையில் தொடர்புடையவர்களை தேடும் பணியில் தமிழக தனிப்படை போலீஸார் கேரளாவில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால், கேரளா எல்லையில், பொள்ளாச்சி பகுதியில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள சோதனைச் சாவடிகளில் ஒரு எஸ்.ஐ மற்றும் மற்றும் துப்பாக்கியுடன் கூடிய 4 போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், எஸ்.ஐ வில்சன் கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க அமைக்கப்பட்ட 10 தனிப்படையினர் கேரளாவில் முகாமிட்டு, அம்மாநில போலீஸாரின் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, தமிழக – கேரளா எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் வாளையாறு, வடக்குகாடு, நடுப்புணி, கோபாலபுரம், கோவிந்தாபுரம், மீனாட்சிபுரம், செம்மணாம்பதி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் போலீஸார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கேரளா பதிவெண் கொண்ட கார், வேன், லாரி, சரக்கு ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணை மேற்கொள்வதுடன் வாகனங்களின் ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT