கோவையில் கடந்த ஆண்டைவிட நடப்பாண்டு விற்பனையாகும் கரும்பு, பூக்கள் விலை அதிகரித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஜன.15) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கோவை பூ மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட், உக்கடம் மார்க்கெட் பகுதிகள் களைகட்டின. மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் வியாபாரிகள் இங்கிருந்து மொத்தமாக பொருட்களை வாங்கிச் சென்றனர்.
வீடுகளில் காப்பு கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் பூளைப்பூ, ஆவாரம்பூ, வேப்பிலை, துளசி, மாவிலை, எலுமிச்சை, மஞ்சள் கிழங்கு, பலவண்ண கோலப் பொடிகள், மண்பானைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. தியாகி குமரன் மார்க்கெட் மற்றும் ரங்கே கவுடர் வீதியில் வெல்லம் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பூக்கள் வரத்து குறைவாக இருந்ததால் மார்க்கெட்டில் விலை அதிகரித்து காணப்பட்டது.
இது தொடர்பாக பூ வியாபாரி சம்பத் கூறும்போது, “ஓசூர், ராயக்கோட்டை, தருமபுரி பகுதிகளில் இருந்து செவ்வந்தி வருகிறது.
அரளி சேலத்தில் இருந்தும், செண்டுமல்லி உள்ளூரில் இருந்தும், ஓசூரில் இருந்தும் வருகிறது. மல்லிகைப்பூ சத்தியமங்கலம், ஜாதிப்பூ, முல்லைப்பூ காரமடை பகுதிகளில் இருந்து வருகிறது.
அதிக பனிப்பொழிவால் பூக்கள் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. மல்லிகைப்பூ வரத்து மிகவும் குறைவாக இருந்ததால் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டு இருமடங்கு விலைக்கு (கிலோ ரூ.3 ஆயிரம்) விற்கப்படுகிறது. முல்லைப்பூ கிலோ ரூ.2,400, ஜாதிப்பூ கிலோ ரூ.1,000, சம்பங்கி கிலோ ரூ.160, செண்டுமல்லி ரூ.80, காக்கடா ரூ.1,000, அரளி ரூ.240, பட்டன் ரோஸ் ரூ.240, செவ்வந்தி ரூ.120, துளசி ரூ.40, பன்னீர் ரோஸ் ரூ.400, மரிக்கொழுந்து கட்டு ரூ.30 வரை விற்கப்படுகிறது. இந்த பூக்கள் அனைத்தின் விலையும் கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகம் ஆகும்” என்றார்.
கரும்பில்லாமல் பொங்கல் பண்டிகை இல்லை. மற்ற விசேஷங்களைவிட பொங்கலின் போதுதான் கரும்பின் வரத்தும், விற்பனையும் அதிகம் இருக்கும். ஆனால், நடப்பாண்டு பூக்களைப் போல கரும்பின் விலையும் அதிகரித்துள்ளது.
கரும்பு வியாபாரி பைசல் கூறும்போது, “நடப்பாண்டு கரும்பு வரத்து குறையவில்லை.
ஆனால், 20 கரும்புகள் கொண்ட கட்டு மொத்த விற்பனை விலையாக ரூ.450-க்கு விற்கப்படுகிறது. கடந்தாண்டு இதே கரும்பு ரூ.250-க்கு விற்கப்பட்டது. வாகன வாடகை உயர்வுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம். எனவே, ஒரு ஜோடி கரும்பை வெளியில் ரூ.80-க்குவிற்கின்றனர்” என்றார்.
15 மஞ்சள் செடிகள் கொண்ட கட்டு ரூ.130 முதல் ரூ.140 வரை விற்பனையானது.