‘பபாசி’ அளித்த புகாரில் பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கைக்கு நிர்வாகிகள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 43-வதுபுத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பத்திரிகையாளர் அன்பழகன் 101-வது அரங்கத்தில் தனது ‘மக்கள் செய்தி மையம்நியூஸ் பிரைவேட் லிமிட்டெட்’ நிறுவன புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்தார். அதில் அரசுத் துறைகளில் நடைபெறும் முறைகேடு குறித்த சர்ச்சைக்குரிய புத்தகங்கள் விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அரங்கத்தை காலிசெய்ய அன்பழகனுக்கு, பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் கடந்த 11-ம்தேதி நோட்டீஸ் அனுப்பினார். அதில்,‘‘உங்கள் கடையில் அரசுக்கு எதிரான சர்ச்சைக்குரிய புத்தகங்களை விற்பனை செய்வது விதிமீறலாகும். பபாசியின் விதிகளுக்கு எதிராக செயல்படுவதால் நீங்கள் புத்தக காட்சியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படுகிறது. தங்கள் அரங்கத்தையும் உடனே அகற்றிக்கொள்ள வேண்டும்’’என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடையை அகற்ற மறுத்து அதிகாரிகளை தாக்கியதாக அன்பழகன் மீது, பபாசி செயலாளர் எஸ்.கே.முருகன் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில், 294 (பொதுஇடத்தில் தவறான வார்த்தைகளை பயன்படுத்துதல்), 341 (சட்டவிரோதமாக செயல்படுதல்), 506 (மிரட்டல் விடுத்தல்) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அன்பழகனை போலீஸார் 12-ம் தேதி அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
இவர், ஏற்கெனவே 2017-ம் ஆண்டுஅமைச்சர் எஸ்.பி.வேலுமணியை மிரட்டியதாக பல்வேறு குற்றச்சாட்டுகளில் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு 130 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு பின் ஜாமீனில் விடுதலையானார். அதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பபாசி சங்கத்தின் செயலாளர் எஸ்.கே.முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பபாசி நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் எவ்வித அரசியல் உள்நோக்கத்துடனும் செயல்படுவதில்லை. புத்தகக் காட்சியில் அரங்குகளைவாடகைக்கு ஒதுக்கும்போது அனைவருக்கும் ஒரே நிபந்தனைகள்தான் விதிக்கப்படுகின்றன. அந்த நிபந்தனைகளை மீறுபவர்களை அரங்கத்தை காலி செய்ய அறிவுறுத்தி, அவர்கள் செலுத்திய வாடகையும் திருப்பி அளிக்கப்படும். அதன்படியே, பத்திரிகையாளர் அன்பழகன் பபாசியின் விதிமுறைகளை மீறியதால் அரங்கத்தை காலி செய்ய அறிவுறுத்தினோம்.
ஆனால், அன்பழகன் அரங்கை காலி செய்ய மறுத்து, பபாசி நிர்வாகிகளை அவதூறாக பேசி தாக்கமுயற்சித்தார். இதனால் தற்காப்புக்காக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் அன்பழகன் மீது புகார் அளித்தோம். எந்த ஒரு கட்சிக்கும், ஆட்சிக்கும் ஆதரவாக அல்லது எதிராக இந்த புகார் அளிக்கப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு
மறுபுறம் அன்பழகன் மீதான நடவடிக்கைக்கு பபாசி சங்க நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பபாசி உதவித் தலைவர் க.நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில், “பத்திரிகையாளர் அன்பழகன் மீதான நடவடிக்கை ஏற்புடையதல்ல. பபாசி விதிகளின்படி அரசு தடை செய்த புத்தகங்களை மட்டுமே புத்தகக் காட்சியில் விற்பனை செய்யக் கூடாது. அரசுக்கு எதிரான கருத்துகள் கொண்ட புத்தகங்களை விற்கக் கூடாது என கூறுவது ஏற்புடையதல்ல. அதேநேரம் இத்தகைய அடிப்படையான கொள்கை மற்றும் உரிமைப்பிரச்சினையில் முழுமையான நிர்வாகக்குழுவை கூட்டியே முடிவெடுக்கப் பட்டிருக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தார்.
கட்சிகள் கண்டனம்
இதற்கிடையே பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரை உடனே விடுவித்து, புத்தக காட்சியில் அவருக்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
இதேபோல், மதிமுக, அமமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதவிர கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான பபாசியின் நடவடிக்கைகளை கண்டித்து எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் கருப்பு துணி அணிந்து புத்தகக் காட்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.