தமிழகம்

ஏரியன் 5 ராக்கெட் மூலம் ஜிசாட்-30 செயற்கைக்கோள் 17-ம் தேதி ஏவப்படுகிறது

செய்திப்பிரிவு

இஸ்ரோவின் தகவல் தொடர்பு சேவைக்கான ஜிசாட்-30 செயற்கைக்கோள், ஏரியன் 5 ராக்கெட் மூலம் பிரெஞ்ச் கயானாவில் இருந்து இம்மாதம் 17-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

நம் நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இன்சாட், ஜிசாட் வகை செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை 40 தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டுள்ளன. அதில் 2005-ம்ஆண்டு செலுத்தப்பட்ட இன்சாட் 4ஏ செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிந்துவிட்டது. அதற்கு மாற்றாக தற்போது 3,357 கிலோ எடை கொண்ட அதிநவீன ஜிசாட்-30 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கைக்கோள் அதிக எடை என்பதால் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரு ஏவுதளத்தில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன்-5 மூலம் வரும் 17-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன.

தொலைத் தொடர்பு சேவை

ஜிசாட்-30 செயற்கைக்கோள் 15 ஆண்டு ஆயுட்காலம் உடையது. அதிலுள்ள சி, க்யூ பேன்ட்டிரான்ஸ்பாண்டர்கள் உதவியால் விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, டிடிஎச் டெலிவிஷன் மற்றும் செல்போன் சேவைக்கு உதவும். 2020-ம் ஆண்டில் இஸ்ரோ ஏவும் முதல் செயற்கைக்கோள் ஜிசாட்-30 என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிசாட்டில் இடம்பெற்றுள்ள ‘கிரிகோரியன்’ ஆன்டெனா தெற்காசிய கடல் பகுதிகள், தீவுகள் மற்றும் வளைகுடா நாடுகளில் தற்போதைய தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தி வழங்க பயன்படும்.

இந்த ஆண்டு மேலும் 2 ஜிசாட் செயற்கைக்கோள்கள் ஏவப்பட உள்ளன. அதன்பின் நம் நாட்டின் இணைய சேவை வேகம் அதிகரிக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT