நீலகிரி மாவட்டத்தில் இந்தஆண்டு வழக்கத்துக்கு மாறாக உறைபனி தாமதமாகத் தொடங்கினாலும், பனியின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி, மார்ச் முதல்வாரம் வரை நீடிக்கும். கடந்த 2019-ம்ஆண்டு அதிக நாள் மழைப் பொழிவுஇருந்ததால், உறைபனிக்காலம்தள்ளிப்போனது. கடந்த 3 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
உறைபனி தொடங்கிய முதல் நாளே வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. கேத்திபள்ளத்தாக்கு பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்தை தொட்டது.
நேற்று அதிகாலை அரசு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, கேத்தி, லவ்டேல் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான உறைபனி நிலவியது. உறைபனியால் மூடப்பட்ட புல்வெளிகள் வெள்ளிக் கம்பிகள்போலவும், தேயிலைச் செடிகள், மலைக் காய்கறிப் பயிர்கள், தாவரங்கள் வெண் முத்துகள் சிந்தியிருந்தது போலவும் காட்சியளித்தன.
வழக்கத்தைவிட இந்த ஆண்டுஉறைபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இரவிலும், அதிகாலையிலும் கடுமையான குளிர் வாட்டுகிறது. இதனால் தேயிலை மற்றும் பல்வேறு பயிர்களும் கருகி வருகின்றன. தாவரங்கள் மற்றும் புல்வெளிகளும் கருகி வருவதால், வனப்பகுதிகளில் பசுமை குறைந்து வனவிலங்குகள் இடம்பெயரவும் வாய்ப்புள்ளது.
உறைபனி குறித்து பருவநிலை ஆய்வாளர்கள் கூறும்போது, ‘கடல்மட்டத்தில் இருந்து 2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உறைபனியின் தாக்கம் அதிகம் காணப்படும்.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், மலை மேலிடப் பகுதிகளான உதகை, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் இந்த ஆண்டு கடுமையான உறைபனி நிலவும் வாய்ப்பு உள்ளது. வானம் மேகமூட்டம் இன்றி தொடர்ந்து காணப்பட்டால், வெப்பநிலை மைனஸில் செல்லவும் வாய்ப்பு உள்ளது’ என்றனர்.