சேலத்தைச் சேர்ந்த 1-ம் வகுப்பு மாணவன் ‘ஃப்ரீ ஸ்டைல் ஏர் பாக்ஸிங்’கில் ஒரு நிமிடத்தில் 240 குத்துகள் பதிய வைத்து ‘ஜெட்லி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு’சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
சேலம், குகை பகுதியைச் சேர்ந்த டீக்கடை மாஸ்டர் சரவணன். இவரது மகன் எஸ்.ஆகாஷ் (6) நான்கு ரோட்டில் உள்ள சிறுமலர் மெட்ரிக் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஓராண்டாக குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆகாஷ், நொடிப்பொழுதில் பல குத்துகளைப் பதியவைத்து, பயிற்சியாளரைக் கவர்ந்துள்ளார். மின்னல் வேகத்தில், ஆக்ரோஷத்துடன் ஆகாஷ் விடும் குத்துகள் அசாத்தியமானதாக இருந்துள்ளது.
இதையடுத்து, திருச்சியில் ‘ஜெட்லி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு’ புத்தகத்தில் சாதனை படைப்பவர்களுக்கான போட்டி நேற்று நடந்தது. இதில் சேலத்தைச் சேர்ந்த ஆகாஷ் கலந்துகொண்டு, ஒரு நிமிடத்தில் ‘ஃப்ரீ ஸ்டைல் ஏர் பாக்ஸிங்’கில் 240 குத்துகளை விட்டு, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து, தங்கப் பதக்கம், கேடயம், சான்றிதழைப் பெற்றார்.
சேலம், செவ்வாய்ப்பேட்டையைச் சேர்ந்த ஜெகநாதன்-மேனகாவின் மகள் ஹர்ஷினி (10) ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மூன்று நிமிடத்தில் ‘ஃப்ரீ ஸ்டைல் ஏர் பாக்ஸிங்’கில் 685 குத்துகளை விட்டு ‘ஜெட்லி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு’ சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து, தங்கம் வென்றுள்ளார். சேலத்தைச் சேர்ந்த ஆகாஷ், ஹர்ஷனி தனி நபர் திறன் பயிற்சியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளதைப் பலரும் பாராட்டியுள்ளனர்.
இதுகுறித்து துரோணா பாக்ஸிங் அகாடமி தலைவர் அருள்முருகன் கூறும் போது, ''இளம் வயதில் சாதனை படைப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தனி நபர் திறன் போட்டியை ‘ஜெட்லி புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்டு’ நடத்தியது. இதில் சேலத்தில் இருந்து சென்ற இளம் பாக்ஸிங் வீரர், வீராங்கனை நிமிடத்தில் ‘ஏர் பாக்ஸிங்’ மூலம் 240, 685 குத்துகளைப் பதிய வைத்து, சாதனை படைத்துள்ளது, அவர்களின் விடா முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. மேலும், பல சாதனைகள் புரிந்து நாட்டுக்குப் பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றார்.