அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்க இன்று நடந்த மாடுபிடி வீரர்கள் முன்பதிவில் தமிழகம் முழுவதும் இருந்து திரண்ட இளைஞர்கள் முந்தி செல்ல முண்டியடித்ததால் நெரிசல் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.
மதுரை மாவட்டம் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு கடந்த வாரம் முடிந்தது. இதனைத்தொடர்ந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டூக்கான மாடுபிடி வீரர்கள் முன்பதிவு இன்று நடந்தது.
ஜல்லிக்கட்டுக்கு புகழ் பெற்ற இந்த மூன்று ஊர்களில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பதையே மாடுபிடி வீரர்கள் விரும்புவார்கள். அதனால், தமிழகம் முழுவதும் இருந்து மாடுபிடி வீரர்கள் அவனியாபுரத்தில் குவிந்தனர்.
மதுரை மாநகராட்சி சுகாதார நல அலுவலர் வினோத் ராஜா தலைமையில் 30 பேர் அடங்கிய மருத்துவர்கள் குமுவினர், மாடு பிடி வீரர்களுக்கான உடற் பரிசோதனை செய்தனர்.
இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க குறைந்தப்பட்சம் 21 ஆக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது ஜல்லிக்கட்டுப் போட்டியில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என விதிமுறை தளர்த்தப்பட்டது.
மாடுபிடி வீரர்களின் ஆதார் கார்டு அடிப்படையில் அவர்களின் வயது ஆய்வு செய்து அவர்கள் ரத்த அழுத்தம், உயரம், எடை பரிசோதிக்கப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் உதவி ஆணையர் ராமலிங்கம், அவனியாபுரம் காவல் ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் நூற்றுக்கும் போலீஸார், மாடுபிடி வீரர்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நீண்ட வரிசையில் காத்திருந்த மாடுபிடி வீரர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார், எச்சரித்தும் கேட்காததால் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை முறைப்படுத்தினர். அதன்பிறகு ஒரளவு நிலை கட்டுக்குள் வந்தப்பிறகு மீண்டும் உடற் பரிசோதனை செய்து, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க டோக்கன் வழங்கினர்.