கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு பொருளாதாரக் குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்திலிருந்து, எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தொடர்ந்த வழக்கு வேறு நீதிபதிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-16 ஆம் ஆண்டு வருமான வரிக்கணக்கில், முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 6 கோடியே 38 லட்ச ரூபாயைக் கணக்கில் காட்டவில்லை எனக் கூறி, சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி கார்த்தி ஆகியோருக்கு எதிராக வருமான வரித்துறை 2018-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.
இவ்வழக்கு சென்னை எழும்பூரில் பொருளாதாரக் குற்ற வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இது எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கார்த்தி சிதம்பரம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. வழக்கிலிருந்து இருவரையும் விடுவிக்க மறுத்த சிறப்பு நீதிமன்றம், குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஜனவரி 21 ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டு, அன்றைய தினம் கார்த்தி சிதம்பரம் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தது.
இந்நிலையில், எம்.பி.யாக தான் இல்லாதபோது தொடரப்பட்ட வழக்கை, சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியதை எதிர்த்து கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் வேண்டும் என தங்கள் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கார்த்தி சிதம்பரம் இயக்குநராக இருந்த அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் நிறுவத்திலிருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் தான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்திற்கு நீதிபதி அனிதா சுமந்த் வழக்கறிஞராக இருந்தபோது ஆஜராகியிருப்பதால், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்றும் வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றும்படி தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்து நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.