இலங்கை வர நடிகர் ரஜினிகாந்துக்கு அந்நாட்டு வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஷ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் உலக தமிழர் திருநாள் 6-ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் க.வி.விக்னேஷ்வரன் சென்னை வந்தார்.இவ்விழாவில் பங்கேற்றதை தொடர்ந்து, நேற்று எழும்பூரில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழகத்தை சார்ந்த முன்னாள் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை சந்தித்து பேசினார். இதை தொடர்ந்து, போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்துக்கு நேற்று பிற்பகல் சென்றார். அங்கு, விக்னேஷ்வரன் ரஜினிகாந்த்தை சந்தித்தார். இச்சந்திப்பின் போது, இலங்கையில் தற்போது தமிழர்கள் சந்திக்கும் நிலையை ரஜினிகாந்திடம் எடுத்துரைத்தார். மேலும், இலங்கையின் வடக்கு மாகாண பகுதிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.