தமிழகம்

மதுரை ரயில் நிலையத்தில் அதிக வசதிகளுடன் தங்க சொகுசு ஓய்வறைகள்: குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவையால் பயணிகள் மகிழ்ச்சி

என்.சன்னாசி

தென் தமிழகத்திலுள்ள ரயில் நிலையங்களில் மதுரை ரயில் நிலையம் பிரதானமானது. இங்கு தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ரயில் நிலையத்தின் தரத்தை மேம்படுத்த, ரயில்வே வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து பல கோடி ரூபாய் செலவில் பிரதான நுழைவுவாயிலில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.

இருப்பினும், ரயில் நிலையத்துக்கு வெளியில் தனியார் விடுதிகளில் அதிக கட்டணம் மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களால் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், மதுரை ரயில் நிலைய வளாகத்தில் பயணிகளுக்கு குறைந்த செலவில் அதிக வசதிகளுடன் ஓய்வறைகளை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதன்படி, ஐஆர்சிடிசி (இந்திய ரயில்வே சுற்றுலாக் கழகம்) சார்பில், முதல் பிளாட்பாரத்தில் செயல்படும் பயணிகளுக்கான தங்கும் ஓய்வறைகள் நட்சத்திர விடுதிகளுக்கு இணையாகத் தரம் உயர்த்தப்பட்டன. இங்குள்ள 24 அறைகளில் 3 அறைகள் குழுவாகத் தங்கும் வகையிலும், இதில் பெண்களுக்கென 2 அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

குறைந்த கட்டணத்தில் 6, 9, 12, 24, 48 மணி நேரம் அளவில் இங்கு ரயில் பயணிகள் தங்கலாம். முதல் நடைமேடையில் ஏற்கெனவே செயல்படும் ‘புட்கோட்’ எனும் சைவ, அசைவ உணவகமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர, மதுரை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் மிகக் குறைந்த கட்டணத்தில் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில், முதலாவது நடைமேடையில் சுமார் 64 பேர் மணிக்கணக்கில் ஓய்வெடுக்கும் வகையில் உயர்தர ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளது. மீனாட்சி கோயில் மற்றும் சுற்றுலாத் தலங்கள், நகரில் பிற அலுவல் பணிகளுக்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊர் திரும்புவோர், குறிப்பிட்ட நேரம் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் அதிக கட்டணத்தில் ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கும் நோக்கில் நவீன வசதிகளுடன் கூடிய இந்த உயர்தர ஓய்வறை (எக்ஸிகியூடிவ்) சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் செல்லூர் கே. ராஜூவால் திறந்து வைக்கப்பட்டு செயல்படுகிறது.

3 ஆயிரம் சதுர அடியில் செயல்படும் இந்த ஓய்வறைகளில் ரயில் பயணிகள் ஓய்வெடுக்க, முதல் 1 மணி நேரத்துக்கு ரூ. 60 கட்டணம். அடுத்தடுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ. 50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தில் குளிப்பது, கழிப்பிடம், ஆடை மாற்றுதல், ஓய்வெடுக்க நவீன இருக்கைகள், விஐபிகளுக்கென தனி இருக்கைகள், ஏசி, டிவி, ரயில்கள் கால அட்டவணை தெரிவிக்கும் தொலைக்காட்சி, பொருட்கள் வைப்பறை, டிராவல்ஸ் ஏற்பாடு, வெளிநாட்டுப் பணம் மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட நேரம் தூங்கி ஓய்வெடுக்க, 4 படுக்கை வசதிகள் கொண்ட அறையும் உள்ளது. இதற்கு தனிக்கட்டணம். தனியார் ஓட்டல்களுக்கு இணையான இந்த வசதிகளை அனுபவிக்க, முன்பதிவு டிக்கெட்டுக்கான பிஎன்ஆர் எண் வைத்திருக்க வேண்டும். காலை, மதியம், இரவு தரமான சுவையான உணவு வழங்கப்படுகிறது.

இதற்கு தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். இரவில் பாண்டியன் எக்ஸ்பிரஸ்-க்கு பின், சென்னை செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் முன் கூட்டியே ரயில் நிலையம் வந்து சிறிதுநேரம் தங்கவும், மாலை நேரத்திலும், தென்மாவட்டத்துக்குச் செல்லும் ரயில்களை பிடிக்கும் பயணிகளும், குறைந்த செலவில் தங்கிச் செல்ல வசதியாக இருப்பதாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் கூறு கின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: பயணிகளுக்கான ஒருங் கிணைந்த தங்கும் வசதி இங்கு உள்ளது போல் இந்தியாவில் எந்த ரயில் நிலையத் திலும் இல்லை. விமான நிலையங்களை போன்று, குறைந்த கட்டணத்தில் அதிக வசதிகளை ஏற்படுத்தி உள்ளோம். எக்ஸிகியூடிவ் அறைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தினமும் 150 பேர் வரை தங்கு கின்றனர்.

குறிப்பிட்ட நேரம் வரை ஒருவர் தங்குவது முதல் சாப்பிடுவது வரை ரூ.60 முதல் ரூ.200 வரை மட்டும் செலவாகும். தேஜஸ் ரயில் மற்றும் இரவுநேர ரயில்களில் பயணிக்கும் மக்கள் ஓய்வறைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ரூ. 120-க்கு காலை உணவும், 180 முதல் ரூ.250-க்கு 7-க்கும் மேற்பட்ட சைவ உணவுகளை (பபே) ருசிக்கலாம். 24 மணி நேரமும் உணவு தயாரித்து வழங்கும் நவீன சமையல் கூடம் உள்ளது. இரவு 12 மணி வரை பெண் ஊழியர்கள் இங்கு பணியில் உள்ளனர்.

தமிழ், ஆங்கிலம் பிற மொழி தெரிந்தவர்களும் பணியில் உள்ளனர். தமிழ் ஆங்கில நாளிதழ்கள், வாரப் பத்திரிகை வாசிக்கலாம். இணைய வசதி உள்ளது. கழிப்பறை உட்பட அனைத்தும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும், சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதால் பெண் பயணிகள் அதிகம் வருகின்றனர். இந்த ஓய்வறைகளை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT