மதுவிலக்கு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, நொளம்பூரை சேர்ந்த வி.சுலோசனா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில் கூறியிருப்பதாவது:
டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி பச்சையப்பன் கல்லூரி முன்பு நடந்த போராட்டத்தில் என் மகன் சாரதி கலந்து கொண்டதாகவும், பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாகவும், அவனை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கும்போது, என் மகன் உள்ளிட்டோரை சிறைத்துறை கண்காணிப்பாளர்கள் சிலர் கொடூரமாக அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
இதனால், என் மகன் மற்றும் அவனுடன் கைதானவர்கள் உடல் முழுவதும் காயத்துடன், எந்த ஒரு சிகிச்சையும் வழங்கப்படாமல் சிறையில் உள்ளனர். எனவே, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களுக்கு இடைக்கால ஜாமீனும் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், பி.ராஜேந்திரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சாரதியை சிறையில் சந்திக்க அவரது தாயாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர் தனது வழக்கறிஞர் உதவியுடன் மகனை சந்தித்துள்ளார். தனது மகனுக்கு உடலில் பலத்த காயமும், எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதேபோல், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிலருக்கும் உடலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகளை காப்பது இந்த நீதிமன்றத்தின் கடமையாகும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் சென்னை மாவட்ட ஐந்தாவது கூடுதல் நீதிபதி எஸ்.செந்தில் குமரேசன் விசாரணை நடத்தி வரும் 17-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.