தமிழகம்

குலுக்கலால் திமுகவிடம் இருந்து கை நழுவிய உதகை ஊராட்சி ஒன்றியம்: அதிமுக வசமானது

ஆர்.டி.சிவசங்கர்

உதகை ஊராட்சி ஒன்றியத்தில் குலுக்கல் முறையில் அதிமுகவிடம் திமுக தோல்வியைத் தழுவியது.

உதகை ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 22 இடங்களில் திமுக 11 வார்டுகளிலும், அதிமுக 7, பாஜக 2 மற்றும் 2 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். இதில் சுயேச்சையாக வெற்றி பெற்ற சித்ரா திமுகவில் இணைந்தார்.

இதனால் திமுக எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. இதனால் உதகை ஊராட்சி ஒன்றியத்தையும் திமுக கைப்பற்றும் நிலை இருந்தது. ஆனால், திமுக சின்னத்தில் வெற்றி பெற்ற பிரேமா அதிமுகவில் இணைந்தார். மேலும், ஒரு சுயேச்சையின் ஆதரவு மற்றும் இரு பாஜக உறுப்பினர்கள் என சம பலத்தை அதிமுக பெற்றது.

இந்நிலையில் இன்று நடந்த மறைமுகத் தேர்தலில் திமுக வேட்பாளர் காமராஜ், அதிமுக வேட்பாளர் கே.மாதன் இருவரும் தலா 11 வாக்குகள் பெற்று சமநிலை அடைந்தனர். இதனால், தேர்தல் அதிகாரி குலுக்கல் முறைக்குப் பரிந்துரை செய்தார்.

இதில், அதிமுக வேட்பாளர் கே.மாதன் பெயருள்ள சீட்டைக் குழந்தை எடுத்ததால், மாதவன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. காலை முதல் பெரும் பரபரப்புக்கிடையே நடந்த தேர்தலில், அதிமுக உதகை ஊராட்சி ஒன்றியத்தை மட்டுமே கைப்பற்றியது.

SCROLL FOR NEXT