சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் ஆகிய 10 ஆயிரத்து 300 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) நடைபெற்று வருகிறது. உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, மறைமுகத் தேர்தல் முழுவதும் ஆடியோ இல்லாத வீடியோவாக பதிவு செய்யவும் மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜெயகாந்தனின் அறிவுறுத்தலின் படி, இன்று காலை, 11 மணியளவில் நடைபெறவிருந்த திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தல் மற்றும் மாலை 3.30 மணியளவில் நடைபெறவிருந்த ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.
அதேபோன்று, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியேற்க இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஊராட்சி மன்ற துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தலில் வாக்களிப்பதற்கு, ஊராட்சி மன்றத் தலைவருக்கு உரிமை உண்டு என்பதால், சங்கராபுரம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல், மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.