நுழைவுவாயிலை பூட்டிய போலீஸார் 
தமிழகம்

ஒன்றிய தலைவருக்கான மறைமுகத் தேர்தல்: விருதுநகரில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று காலை ஒன்றிய தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அப்பொழுது அலுவலகத்தின் நுழைவுவாயிலை இழுத்துப் பூட்டி பத்திரிகையாளர்களுக்கும் அலுவலர்களுக்கும் போலீஸார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் 11 ஒன்றிய தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (ஜன.11) காலை தொடங்கியது. விருதுநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மறைமுக தேர்தலுக்காக வார்டு உறுப்பினர்கள் வந்து சேர்ந்தனர்.

அப்பொழுது செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்களை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நுழைவுவாயிலை இழுத்துப் பூட்டி கூடுதல் எஸ்பி மாரிராஜன் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சற்று நேரத்திற்கு பிறகு உயர் அதிகாரிகளுடன் பேசிய கூடுதல் எஸ்பி, அதன் பின்னர் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்களை உள்ளே செல்ல அனுமதித்தார். இருப்பினும் பத்திரிகையாளர்கள் அனைவரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வெளியிலேயே தனியாக அமர வைக்கப்பட்டு அவர்களை சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இச்சம்பவம் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT