மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நேரில் காண முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்ததாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் பொங்கல் பரிசு ரூ.1000 பணத்துடன், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா மதுரை செக்காணூரணி பகுதியில் இன்று (டிச.10) நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் பரிசினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நேரில் காண வரும்படி முதல்வருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து முதல்வர் பரிசீலனை செய்து அறிவிப்பார்.
இந்த ஆண்டும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளைக்கு முதல்வர் பெயரிலும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு துணை முதல்வர் பெயரிலும் கார்கள் பரிசாக வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.
சிறுபான்மையினரின் அரண் அதிமுக..
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "கடந்த 30 ஆண்டுகளாக அதிமுக அரசு எவ்வாறு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக இயங்கியதுதோ அதேபோல் இனியும் சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பு அரணாக முதல்வர் இருப்பார்.
வாஜ்பாய் ஆட்சியில் பாஜக கூட்டணியில் திமுக இருந்தது. அப்போதெல்லாம் குடியுரிமை திருத்தத்துக்கு ஆதரவளித்தவர்கள் இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். இதனை சிறுபான்மையின மக்கள் நம்பமாட்டார்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக முதல்வரை பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் நேரில் சந்தித்து முதல்வருக்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளன" என்றார்.