திருக்குற்றாலநாத சுவாமி கோயிலிலும், சங்கரன் கோயிலிலும் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நடராஜ பெருமான் திருத்தாண்டவம் ஆடிய 5 சபைகளில் ஒன்றான சித்திரசபை அமையப்பெற்ற குற்றாலத்தில் உள்ள திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் நடராஜருக்கு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா, நடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
கடந்த 5-ம் தேதி தேரோட்டம், 8-ம் தேதி சித்திரசபையில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. 10-நாள் விழாவான இன்று அதிகாலை 3.20 மணிக்கு மேல் சித்திர சபையில் நடராஜர் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. காலை 5 மணிக்கு மேல் திரிகூட மண்டபத்தில் நடராஜர் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் திருவெம்பாவை திருவிழா கடந்த ஜனவரி 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் ரதவீதி உலா நடைபெற்றது. கடந்த 6-ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று பரமபதவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் 9/ம் நாளான நேற்று முன்தினம் கோரதம் வீதியுலா நடைபெற்றது.
விழாவின் 10 நாளான இன்று திருவாதிரை திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டுகாலை சிவகாம சுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீநடராஜ பெருமானுக்கு அபிஷேகம், அலங்காரம், கோ பூஜை, தீபாராதனை, ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு திருக்கயிலாய வாத்திய இசையுடன் சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமான் ஆனந்த நடனமாடி சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது. விழாவில் கோயில் துணை ஆணையர் கணேசன் மற்றும் மண்டகப்படிதாரர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோயிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், கோபூஜை, ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாரதனை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணேசபட்டர் மற்றும் மண்டப்படிதாரர்கள் செய்திருந்தனர்,