சுட்டுக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ரூ.1 கோடி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பருத்திவிளையைச் சேர்ந்தவர் வில்சன் (58). தமிழக காவல்துறையில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு களியக்காவிளை இஞ்சிவிளை குறுக்கு சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் வில்சன் பணியில் இருந்தார். சக போலீஸார் சிறிது தூரத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இரவு 10 மணியளவில் கேரளாவில் இருந்து வேகமாக வந்த கார் ஒன்று சோதனைச் சாவடியை கடந்து செல்ல முயன்றது.
இதைப் பார்த்த வில்சன் அந்த காரை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார். சோதனைச் சாவடியை கடந்து சிறிது தூரம் சென்றதும், காரை நிறுத்திவிட்டு அதில் இருந்து இறங்கிய குல்லா அணிந்த 2 இளைஞர்கள் வில்சனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது திடீரென அவர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்து வில்சனை தொடர்ச்சியாக 3 முறை சுட்டுள்ளார். வில்சனின் மார்பு மற்றும் தொடையில் 3 குண்டுகள் பாய்ந்ததால் பலத்த காயமடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காருடன் 2 இளைஞர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த சக போலீஸார் ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கிக் கிடந்த வில்சனை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் வழியிலேயே உயிரிழந்தார். போலீஸ் ஒருவரே சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெற்கு மண்டல காவல் துறை தலைவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த வில்சனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி இன்று (ஜன.10) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு 8 மணி முதல் பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவரை, இரவு சுமார் 9.30 மணியளவில் அங்கு வந்த இரண்டு நபர்கள், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டு, நிவாரண உதவி வழங்கப்படும் எனவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படும் என்பதையும் நேற்று சட்டப்பேரவையில் நான் அறிவித்து இருந்தேன்.
சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உயரிய தியாகத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பினமாக அவரது குடும்பத்துக்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.