தமிழகம்

வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இலக்கிய பேச்சாளர் நெல்லைக் கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த டிசம்பர் 29-ல் எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது.

அதில் பேசியபோது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக போலீஸார் என் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

அந்தக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட பேச்சு வழக்கில் "சோலிய முடிக்கலியா?" என்றேன். அதன் அர்த்தம், பிரதமர் மோடி, அமித்ஷாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரவில்லையா என்பதே.

ஆனால் பிரதமர், உள்துறை அமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நான் பேசியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. புகார்தாரர் சார்பில் நெல்லை கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்ய ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நெல்லை கண்ணன் மனு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT