காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே கார் ஓட்டுநர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், ஒருபெண் உட்பட 5 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர் பலராமன் (50). வாடகை கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தஞ்சியப்பன் (25), நடராஜன் (24), டெய்சி விக்டோரியா (41) ஆகியோரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து வேலூர் அழைத்து செல்வதற்காக காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங் கலம் அருகே சென்று கொண்டிருந்த போது, காரில் பயணித்து மூவரும், தங்களது நண்பர்கள் இருவரை அழைத்து செல்ல வேண்டும் எனக் கூறி காரை நிறுத்தினர். அங்கு, வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த முகம்மது கவுஸ் (31), ரவி (31) ஆகிய இருவரும் காரில் ஏறினர்.
சிறிது தூரம் சென்றதும், 5 பேரும் சேர்ந்து ஓட்டுநர் பலராமனின் கழுத்தை நெறித்து கொலை செய்த னர். அவரது உடலை காஞ்சிபுரம் அருகே உள்ள சிறுவாக்கம் கிராமப் பகுதியில் உள்ள தென்னந் தோப்பில் வீசிவிட்டு காரை கடத்திச் சென்றனர். இதுதொடர்பாக, காஞ்சி புரம் தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து மேற்கூறிய 5 பேரை யும் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 2-ல் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்தது. 5 பேர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்த நீதிபதி ஆர்.கணேசன், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 5 பேருக் கும் சேர்த்து ரூ.40,500 அபராதம் விதிப்பதாகவும், அபராதத்தை கட்ட தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுப விக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அரசு தரப்பு வழக்கறிஞராக சம்பத் ஆஜ ரானார்.