திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதற்கு, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின், சுப்ரமணியன் சுவாமி, ஓபிஎஸ் ஆகியோருக்கு சிஆர்பிஎஃப் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தற்போது ஓபிஎஸ், ஸ்டாலின் ஆகியோருக்கு வழங்கப்படும் கமாண்டோ பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக சிஆர்பிஎஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடர் முடிந்த நிலையில் ஓய்வெடுக்க அந்தமான் சென்றார் ஸ்டாலின். அவருடன் பாதுகாப்புக்கு சிஆர்பிஎஃப் வீரர்களும் சென்றனர். இந்நிலையில் அவருக்கும் நேற்று முதல் இசட் பிரிவு பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கு, கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்ட திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜன.10) வெளியிட்ட அறிக்கையில், "தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பின விலக்கிக்கொண்டு இருப்பது தவறான நடவடிக்கையாகும்.
தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா லட்சியங்களுக்கு எதிராக, திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக திட்டமிட்டுப் பரப்பப்படும் கருத்துகளுக்கு ஸ்டாலினே சரியான எதிர்ப்பைக் காட்டி வருகிறார். மக்கள் செல்வாக்கு அவருக்கு நாளும் அதிகரித்து வருகிறது.
பெரியார் சிலையை உடைப்பது போன்ற கேடான செயல்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்டப் பாதுகாப்பு தொடர்வதுதான் நியாயமானது.
அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த காவல் பாதுகாப்பை விலக்கிக்கொண்டதற்காக மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் கண்டனங்கள்" என வைகோ தெரிவித்துள்ளார்.