கன்னியாகுமரியில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை
வழங்கப்படும் என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் அவர்வெளியிட்ட அறிவிப்பு:
தமிழக - கேரள எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் சோதனை சாவடி அமைத்து காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இச்சோதனை சாவடியில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தார்.
இரவு சுமார் 9.30 மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் வில்சனை கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச்சென்றுள்ளனர். இதில் காயங்கள் ஏற்பட்டு, நிலை தடுமாறி வில்சன் கீழே விழுந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக விரைந்து சென்று காயமடைந்த வில்சனை மீட்டு, குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வில்சன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெற்கு மண்டல காவல் துறை தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு நேரில் சென்று டிஜிபியும் விசாரணை மேற்கொண்டு வருகிறார். குற்ற
வாளிகளை விரைவில் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.
மறைந்த வில்சனுக்கு மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த வில்சன் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படும் என்றார்.