நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு உறை பனிப்பொழிவு தாமதமாகத் தொடங்கியுள்ளது.
நீலகிரியில் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் மத்தியில் வரை பனிப்பொழிவு காணப்படும். மெல்ல மெல்ல வெப்பநிலை குறைந்து உறை பனிப்பொழிவு ஏற்படும். நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அவலாஞ்சி, அப்பர் பவானி, முக்கூர்த்தி, உதகை ஆகிய பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்படும். நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பனிக்காலமாகும். ஆனால், கடந்த ஆண்டில் ஆகஸ்டு மாதம் தொடங்கிய மழை, நவம்பர் வரை நீடித்ததால் பனிக்காலம் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.
இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக காலதாமதமாக உறை பனி தொடங்கியுள்ளது. இதனால் உள்ளூர் மக்கள், விவசாய பணிகளுக்குச் செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
1 டிகிரி செல்சியஸ் பதிவு
நீலகிரி மாவட்டம் உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலை 1 டிகிரியாக அரசு தாவரவியல் பூங்காவில் பதிவாகி உள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய நீர்ப்பனியிலும் குளிர் குறைந்து டிசம்பர் மாதத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரியாக பதிவானது.
இந்நிலையில், ஜனவரி மாதத்தில் குளிரின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரியாக பதிவாகியிருந்த சூழலில் இன்று (ஜன.9) 1 டிகிரியாக பதிவாகியுள்ளது. வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸாக குறைந்ததால், கடும் குளிர் வாட்டி வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இரவு நேரங்களில் குளிருக்கு இதமாக தீயிட்டுக் குளிரைப் போக்கி வருகின்றனர். பனிப்பொழிவு காரணமாக காலை சூரியன் உதித்து பல மணிநேரமாகியும் குளிரின் தாக்கம் குறையவில்லை. குளிர் காரணமாக மக்கள் பகல் நேரங்களிலும் உடலை சூடாக வைத்திருக்க தொப்பி, கம்பளி, ஜெர்கின் ஆகிய வெப்ப ஆடைகளை அணிந்து வலம் வருகின்றனர்.
பனி பாதுகாப்பு நடவடிக்கை:
பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் உதகையில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய பூங்காக்களில் மலர் செடிகளைப் பாதுகாக்க பனிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோடை சீசனுக்காக இந்த பூங்காக்களில் பல்லாயிரிக்கணக்கான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. பனிப்பொழிவு காரணமாக இந்த செடிகள் கருகாமல் இருக்க பிளாஸ்டிக் போர்வைகள் கொண்டு பாதுகாப்பு அரண்களை பூங்கா ஊழியர்கள் அமைத்துள்ளனர்.