துணை முதல்வர் ஓபிஎஸ்ஸுக்கு சிஆர்பிஎஃப் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தற்போது அவருக்கு வழங்கப்படும் கமாண்டோ பாதுகாப்பை விலக்கிக் கொள்வதாக சிஆர்பிஎஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியல் தலைவர்களில் முக்கிய நபர்களுக்கு மத்திய கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முதல்வருக்குப் பாதுகாப்பு தர என்.எஸ்.ஜி எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப் பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மொத்தம் 16 வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே, என்எஸ்ஜி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவருமான, முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியும் இசட் பிளஸ் பாதுகாப்புக்கு உரியவர்கள்.
இதுதவிர எஸ்.எஸ்.ஜி என சிறப்பு பாதுகாப்புப் பிரிவு ஒன்றை ஜெயலலிதா உருவாக்கினார். தற்போது மத்திய உள்துறை அமைச்சரின் காஷ்மீருக்கான ஆலோசகராக இருக்கும் விஜயகுமார் இதற்குத் தலைமையேற்று வடிவமைத்தார். இது முழுக்க முழுக்க முதல்வருக்கான பாதுகாப்புக்காக, போலீஸில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வைத்து உருவாக்கப்பட்டது.
இதற்குப் பயிற்சி அளிக்க பிஎஸ்எஃபிலிருந்து மனோகரன் வரவழைக்கப்பட்டு தமிழக கேடராக மாற்றப்பட்டார். சமீபத்தில் ஐஜியாக அவர் ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஜெயலலிதா வைத்திருந்த எஸ்.எஸ்.ஜி படையை, கருணாநிதி முதல்வரான பின்னர் எண்ணிக்கையை 140 அளவுக்குக் குறைத்து கோர்செல் எனப் பெயர் மாற்றம் செய்தார்.
பின்னர் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா கோர்செல் எண்ணிக்கையை அதிகப்படுத்தினார். கோர்செல் முழுக்க முழுக்க முதல்வர் பாதுகாப்புக்கானது. ஆனால் ஜெயலலிதா மறையும் வரை அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும் இருந்தது. இதைத் தவிர இரண்டாம் கட்டப் பாதுகாப்பு சில விஐபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தமிழகத்தில் 3 முக்கிய விஐபிக்களுக்கு இசட் பிரிவு எனப்படும் சிஆர்பிஎஃப் கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. சுப்பிரமணியன் சுவாமி, ஸ்டாலின், ஓபிஎஸ் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
அதில் முதன்மையானவர் சுப்பிரமணியன் சுவாமி. இவருக்கு சிஆர்பிஎஃப் கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலினுக்கு கமாண்டோ படை பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்ஸுக்கு கடந்த 2017-ம் ஆண்டு முதல் சிஆர்பிஎஃப் கமாண்டோ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஓபிஎஸ்ஸுக்கு வழங்கப்படும் சிஆர்பிஎஃப் கமாண்டோ படை பாதுகாப்பு விலக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தகவலும் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வரும் 10-ம் தேதி முதல் அவருக்கான பாதுகாப்பு விலக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கமாண்டோ படை பாதுகாப்பை விலக்கும் முடிவை மத்திய அரசுதான் எடுக்கும். ஆனால் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அது நடக்க வாய்ப்பில்லை என்கின்றனர். அதே நேரம் ஓபிஎஸ் தனக்கான பாதுகாப்பு வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாலும் விலக்கிக் கொள்ளப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.