தமிழகம்

'லஞ்சம் வாங்க மாட்டோம்': தேனியில் அரசுப்பள்ளி மாணவர்கள் முன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உறுதிமொழி

என்.கணேஷ்ராஜ்

லஞ்சம் வாங்கமாட்டோம். ஊழலற்ற ஊராட்சியாக மாற்றுவோம் என்று அரசுப் பள்ளி மாணவர்கள் முன்பு சில்வார்பட்டி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மாணவர்களின் பன்முகத்திறமையின் அடிப்படையில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி மாதிரிப்பள்ளியாக அறிவிக்கப்படும். இதன்படி சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கட்டுரை, பேச்சு, கவிதைப் போட்டியில் சிறந்து விளங்குவதால் மாதிரிப்பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பள்ளியில் மாணவர் நாடாளுமன்றம் செயல்பட்டு வருகிறது. பிளஸ்2 மாணவரான சஞ்சய்குமார் சபாநாயகராக செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையில் 13 அமைச்சர்கள் உள்ளனர்.

இந்நிலையில் சில்வார்பட்டி ஊராட்சியில் வெற்றி பெற்ற பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மோகன், ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் சுப்புலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சித் தலைவர் பரமசிவம், 12-வது வார்டு உறுப்பினர்கள் வெங்கடேஷ், மலர்விழி, கிருஷ்ணமூர்த்தி, ஈஸ்வரி, கீதாலட்சுமி, சுகந்தி, பரமன், சிவக்கண்ணன், மகேஸ்வரி, முனியம்மாள், கணேசன், சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாணவர் நாடாளுமன்ற சபாநாயகர் சஞ்சய்குமார் தலைமையிலான அமைச்சர்கள் வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து உள்ளாட்சிப்பிரதிநிதிகள் மாணவர்களின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில், நெகிழி இல்லாத ஊராட்சியாக மாற்றுவேன், எனக்கு வாக்களி்த்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டேன், லஞ்சம் வாங்க மாட்டோம். ஊழலற்ற ஊராட்சியை உருவாக்குவேன். பசுமைப்பரப்பை விரிவுபடுத்துவேன் என்று 10வகையான உறுதிமொழியை எடுத்துக் கொண்டு கையொப்பமிட்டனர்.

பின்பு பள்ளிவளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

இது குறித்து தலைமையாசிரியர் மோகன் கூறுகையில், மாணவர்கள் அரசியல் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பாராளுமன்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். அரசியல் என்பது சமூக சேவை செய்வதற்கான சிறந்த தளம். இதை மாணவர்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அழைத்து விழா நடத்தினோம் என்றார்.

SCROLL FOR NEXT