தமிழகம்

தமிழகம் முழுவதும் மறைமுக தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு 

கி.மகாராஜன்

தமிழகம் முழுவதும் மறைமுக தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நடைபெறும் அன்று அனைத்து இடங்களிலும் தேர்தலை வீடியோ பதிவு செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் ஆனந்த முருகன் என்பவர் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக, "தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாயமாக நடைபெற்றதாகத் தெரியவில்லை.

வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் குளறுபடிகள் இருப்பதாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜனவரி 11ல் , மாவட்ட தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேவைப்படும் பட்சத்தில் தேர்தலை வீடியோ பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக தேர்தல் ஆணையம் தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், மறைமுக தேர்தல் நடத்தப்பட்டால் அது நியாயமான முறையில் நடைபெறாது. ஆகவே தமிழகம் முழுவதும் மறைமுக தேர்தலை ஒத்தி வைக்கவும், தேர்தல் நடைபெறும் அன்று அனைத்து இடங்களிலும் தேர்தலை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்" என முறையிட்டார்.

இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT