இலங்கை மற்றும் இந்திய அரசுகள் இடையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்து என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு பற்றி, அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்துள்ளதா, சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் இளம்பரிதி தன் பேட்டியில், இந்திய சட்டங்கள் இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை.
இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்பதே அவர்கள் கோரிக்கை. அதுதான் தீர்வாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார். இலங்கை குடியுரிமை சட்டத்தில் கூறியுள்ள படியும் இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை’’ என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.பாண்டியராஜன் பேசியதாவது:
மத்திய அரசு, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மன், பிரிட்டன் நாடுகளில் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கியுள்ளது. இலங்கையுடன் இரட்டை குடியுரிமைக்கான ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் கோரிக்கை.
அவ்வாறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால் இலங்கை தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை சாத்தியமே. இளம்பரிதியின் அறிக்கையானது இந்தியா இலங்கை இடையில் 1964,1974-ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம் 6 லட்சம் நாடற்ற தமிழர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிப்பதாகக் கூறினோம். அதில் 4 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு அளித்துள்ளோம்.
இங்கு வசிக்கும் 35 ஆயிரம் இலங்கை தமிழர்கள் அதன் தொடர்ச்சியாக இந்திய குடியுரிமை கேட்கின்றனர். அந்த விவகாரம் வேறு. தற்போதைய விவகாரம் அகதிகள் முகாமில் உள்ள 70 ஆயிரம் இலங்கை தமிழர்களுக்கானதாகும். அவர்கள் அங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். சொத்துகளை விட்டுவிட்டு இந்திய குடியுரிமை வாங்கினால் அந்தச் சொத்துகளை எப்படி காப்பாற்றுவது. எனவே இரட்டைக் குடியுரிமை தான் ஒரே தீர்வு என்பதால் அது சாத்தியம்தான். இவ்வாறு அவர் பேசினார்.