2015-ம் ஆண்டு சென்னையை வாட்டிய பெருமழை காலமே கடைசியாக தமிழகத்தில் இயல்பான அளவைவிட கூடுதலாக பெய்த ஆண்டு ஆகும். அதன்பின்னர் 4 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று கூடுதலாக பொழிந்துள்ளது.
தமிழகத்தை பொருத்த வரை ஆண்டின் 48 % சராசரி மழை பொழிவு வடகிழக்கு பருவமழை வாயிலாக தான் கிடைக்கப்பெற்றது. பொதுவாக அக்டோபர் மூன்றாம் வாரத்தில் துவங்கும் வட கிழக்கு பருவமழை ஜனவரி முதலாவது வாரத்திற்கு முன்னதாக நிறைவடையும்.
அந்த வகையில் தமிழகத்தில் இந்த ஆண்டு மிக சரியான நேரத்தில் துவங்கிய வடகிழக்கு பருவமழை துவக்கம் முதலே தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழையை கொடுத்தது.
.
பொதுவாக வடகிழக்கு பருவமழை காலங்களில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை இருக்கும். ஆனால் 2019-ம் ஆண்டு வித்தியாசமான ஆண்டு ஆகும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை இருந்தது, ஆனால் புயல் இல்லை. தமிழகத்தில் எந்த ஒரு புயலோ, காற்றழுத்த தாழ்வு மண்டலமோ ஏற்படவில்லை.
மாறாக கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றின் சாதக போக்கு, மகா புயலின் முன்பாகவும், பின்பாகவும் குமரிக்கடல் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகள், கிழக்கு திசைக் காற்றும் மேற்கு நோக்கி திசைக் காற்றும் சந்திக்கும் நிகழ்வு போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் வடகிழக்குப் பருவமழை காலகட்டத்தில் நல்ல மழை பெய்தது.
தமிழகத்தை பொருத்த வரை வடகிழக்கு பருவமழையால் கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவு 44.2 செ.மீ.
2015-ம் ஆண்டு சென்னையை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் நிகழ்ந்த நேரத்தில் மட்டும் 67.61 செ.மீட்டர் அளவிற்கு மழை பொழிவு இருந்தது, இது இயல்பை விட 53 சதவீதம் அதிகம்.
கடுமையான வறட்சியை சந்தித்த 2016-ம் ஆண்டு 16.83 செ.மீ மழை மட்டுமே பதிவாகி இருந்தது, இது இயல்பை விட 62 சதவீதம் குறைவு.
2017-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெய்த சராசரி மழை அளவு 40.1 செ.மீ ஆக பதிவாகி இருந்தது. இது இயல்பை விட 9 சதவீதம் குறைவு.
2018-ம் ஆண்டு 33.79 செ.மீ அளவிற்கு மழை பதிவாகி இருந்தது, இதுவும் இயல்பை விட 24 சதவீதம் குறைவான மழை பொழிவு ஆகும்.
2019-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை 45.77 செ.மீ சராசரி மழை பதிவாகி உள்ளது, 2015-ம் ஆண்டு சென்னை பெரு வெள்ளத்திற்கு பிறகு, அதாவது நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் 2019-ல் தான் தமிழகம் இயல்பை விட 2 சதவீதம் கூடுதல் மழையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வட கிழக்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட 2% அதிகம் பெய்ததில் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் கோவையில் 20 முதல் 60% வரை அதிகம் பெய்துள்ளது.
வேலூர், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் மதுரையில் இயல்பை விட மழை குறைவு.
சென்னையைப் பொறுத்து வரை மழை சற்று குறைவு என்றாலும் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும், ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதியில் இருந்து கிடைக்கப்பெற்ற அதிகபடியான நீர் வரத்தின் காரணமாகவும் சென்னைக்கு குடிநீர் ஆதரமாக விளங்கும் பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர் இருப்பு கணிசமாக உள்ளது.
நான்கு ஏரிகளும் சேர்த்து மொத்தமாக சேகரிக்கப்படும் நீரின் அளவு 11257 மில்லியன் கனஅடி கொள்ளளவாகும். இன்றைய நிலவரப்படி மேற்கண்ட 4 ஏரிகளில் 5635 மில்லியன் கன அடி வரை நீர் இருப்பு உள்ளது, இதனால் நடப்பாண்டில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்பதே நிதர்சனம்.
இதேப்போன்று சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துபோன நிலையில் வடகிழக்குப்பருவமழை இந்த ஆண்டு ஏமாற்றாததாலும், தண்ணீர் தேவை குறித்த விழிப்புணர்வு காரணமாகவும் மழை நீர் சேகரிக்கப்பட்டு கணிசமான அளவு நிலத்தடி நீர் உயர்ந்ததும் மகிழ்ச்சி தரும் ஒரு நிகழ்வு ஆகும்.
இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை நாளை அல்லது ஓரிரு நாட்களில் நிறைவடையக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.