கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் அதிகாரிகள். 
தமிழகம்

கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு: மலைவாழ் மக்கள் அளவில்லா மகிழ்ச்சி

ந. சரவணன்

வாணியம்பாடி அடுத்த நெக்கனாமலைக்கு முதல் முறையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. இதனால், மலைவாழ் மக்கள் அளவில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நெக்கனாமலை கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையில் 167 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கூலித் தொழில் செய்து வருகின்றனர்.

நெக்கனாமலையில் சாலை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை வசதிகளைக் கேட்டு மலைவாழ் மக்கள் கடந்த 70 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். குறிப்பாக மலையடிவாரத்தில் இருந்து சாலை வசதி கேட்டு, தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சாலை வசதி இல்லாத காரணத்தால் மலையில் வசிக்கும் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டாலோ, உடல்நிலை சரியில்லை என்றாலோ டோலி கட்டி தூக்கி வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு உயிரிழந்தவரின் உடலை மலையடிவாரத்தில் இருந்து டோலி கட்டி தூக்கிச் செல்லும் சம்பவம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நெக்கனாமலைக்கு நேரில் சென்று சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு மலைப்பாதையில் நடந்து சென்று சாலை அமைப்பது குறித்து ஆய்வு நடத்தினார். இந்நிலையில், வரலாற்றில் முதல் முறையாக மலைவாழ் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை மலைக்கே சென்று வழங்க ஆட்சியர் சிவன் அருள் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன் பேரில், நெக்கனாமலையில் உள்ள 150 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மலைக்குக் கொண்டு செல்ல இன்று (ஜன.8) ஏற்பாடு செய்யப்பட்டது. வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம், வட்ட வழங்கல் அலுவலர் குமார், கூட்டுறவு சங்கத் தலைவர் திருப்பதி ஆகியோர் முன்னிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு 16 மூட்டைகளில் கட்டப்பட்டு, 12 கழுதைகள் மூலம் நெக்கனாமலைக்கு இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டது.

கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு மூட்டைகளைச் சுமந்த 12 கழுதைகளும், பாதுகாப்புக்கு நெக்கனாமலையைச் சேர்ந்த 6 பேரும் உடன் சென்றனர். காலை 10.30 மணிக்கு மலை ஏறத் தொடங்கி, கழுதைகள் பகல் 1 மணிக்கு மலையை அடைந்தன.

இதுகுறித்து நெக்கனாமலையைச் சேர்ந்த முனுசாமி என்பவர் கூறும்போது, "கடந்த 70 ஆண்டுகளாக ரேஷன் பொருட்களை 5 கிலோ மீட்டர் தொலைவுள்ள கிரிசமுத்திரம் பகுதிக்குச் சென்று பெற்று வந்தோம். அதேபோல், முதியோர் உதவித்தொகையும் அவ்வாறே பெற்று வந்தோம்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று முதல் முறையாக பொங்கல் பரிசுத் தொகுப்பு மலைக்குக் கொண்டு வரப்பட்டு வழங்கப்பட ஏற்பாடு செய்தது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல, மாதந்தோறும் ரேஷன் பொருட்களை மலைக்கே கொண்டு வந்து வழங்கினால் பெரும் உதவியாக இருக்கும் என வருவாய்த் துறையினரிடம் கோரிக்கை வைத்தோம். பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நிரந்தரத் தீர்வுக்கு நெக்கனாமலைக்கு சாலை வசதியை ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

SCROLL FOR NEXT