தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை நாளை அல்லது ஓரிரு நாட்களில் நிறைவடையக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜன.8) வெளியிட்ட தகவல்:
''காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும்.
வடகிழக்குப் பருவமழை நாளை அல்லது ஓரிரு நாட்களில் நிறைவடையக்கூடும்.
கடந்த 24 மணிநேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அதிகபட்சமாக 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது''.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.