தமிழகம்

குடியுரிமை சட்டத் திருத்தம் ஏன்? எதற்கு?- மதுரையில் பொதுமக்களிடம் புத்தகம் மூலம் பாஜக விழிப்புணர்வு பிரச்சாரம்

எஸ்.ஸ்ரீனிவாசகன்

குடியுரிமை சட்டத் திருத்தம் ஏன்? எதற்கு? என்ற தலைப்பிலான புத்தகத்தை மதுரையில் பொதுமக்களிடம் வழங்கி பாஜகவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க, குடியுரிமை திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், முஸ்லிம்களுக்கு இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்படவில்லை.

அதனால், நாடு முழுவதும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதுரையில் பாஜகவினர் குடியுரிமை சட்டத் திருத்தம் ஏன்? எதற்கு? என்ற தலைப்பிலான 20 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை மதுரையில் பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து பாஜக தொண்டர் நாகராஜ் கூறும்போது, "கடந்த திங்கள்கிழமை முதல் இந்த பிரச்சாரத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எங்கள் நிர்வாகி ஸ்ரீநிவாசன் வழிகாட்டுதலின்படி நாங்கள் இதனை செய்கிறோம். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் புத்தகங்களை விநியோகிக்கிறோம். ஆனால், புத்தகத்தைப் பற்றி எதுவும் விளக்கிப் பேசுவதில்லை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்க புத்தகங்களை மட்டுமே விநியோகிக்கிறோம்.

இன்று காலையில் மதுரை விஸ்வநாதபுரம், உழவர் சந்தை, ஆட்சியர் அலுவலகம், தல்லாகுளம் என பல்வேறு பகுதிகளிலும் புத்தகங்கள் விநியோகித்தோம்.

தொடர்ந்து வரும் ஜனவரி 20 முதல் 31-ம் தேதிவரை வீடுவீடாக குடியுரிமை சட்டம் 2019 தொடர்பான துண்டு பிரசுரங்களை விநியோகிக்க இருக்கிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT