தூத்துக்குடியில் போலீஸ் வாகனத்தில் ஏறி டிக் டாக் பதிவு செய்து வெளியிட்ட 3 மாணவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் நூதன தண்டனை வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் லெவஞ்சிபுரம் மற்றும் முனியசாமிபுரத்தைச் சேர்ந்தவர்கள் கோகுலகிருஷ்ணன் (17), செகுவேரா (21), சீனு (17).
இவர்கள் மூவரும் அண்மையில் தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள ஆயுதப்படை முகாம் அருகே நிறுத்தியிருந்த போலீஸ் வாகனம் மீது ஏறி நடிகர் விஜய் பட வசனத்துக்கு டிக் டாக் பதிவு செய்து வெளியிட்டுள்ளனர்.
விளைவு அறியாது அவர்கள் பதிவிட்ட அந்த வீடியோ வைரலாகப் பரவியது. ஒருகட்டத்தில் அந்தப் பதிவு காவல்துறையினரின் குரூப்களுக்கே வந்து சேர்ந்தது. அதிர்ந்துபோன காவல்துறை 3 பேரையும் தீவிரமாகத் தேடிப்பிடித்தது.
அவர்களை நேரில் வரவழைத்த மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன், பொழுதுபோக்கின் எல்லை என்னவென்பதைப் புரியவைத்ததோடு 3 பேரும் ஒரு நாள் முழுவதும் போக்குவரத்தை ஒழங்கப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன் பேரில் 3 பேரும் இன்று (ஜன.8) காலை முதல் தூத்துக்குடி நகரில் உள்ள 3 இடங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.
"செல்ஃபி மோகம், டிக்டாக் மோகம் என இளைஞர்கள் தங்கள் கையில் உள்ள பொன்னான நேரத்தை பொழுதுபோக்கி வீணாக்குகின்றனர். அவ்வப்போது அத்தகைய அறியாப் பிள்ளைகளுக்கு இதுபோன்ற தண்டனைகள் வழங்கினால் அவர்களை நல்வழிப்படுத்துவதற்கு ஏதுவாக இருக்கும்" என மாணவர்களைப் பார்த்து பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.