நளினி | கோப்புப் படம் 
தமிழகம்

நளினியை விடுதலை செய்ய முடியாது: நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை

செய்திப்பிரிவு

நளினியை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள்தண்டனை கைதியாக சிறையில் உள்ள நளினி தன்னை விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் உள்ளிட்ட 7 பேரையும் முன் கூட்டியே விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கடந்த 2018 செப்டம் பரில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது இதுவரை ஆளுநர் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை.

எங்களை விடுவிக்க அமைச்சரவை ஒன்றுகூடி தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்த மறுநாளே அவர் அதுதொடர்பாக முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆளுநர் தனது சட்டப்பூர்வமான கடமையை செய்யத் தவறிவிட்டதால் நாங்கள் சட்டவிரோதமாகவே சிறைக்குள் இருப்பதாக கருத வேண்டும். எனவே, சட்டவிரோதக் காவலில் உள்ள என்னை விடுதலை செய்ய சிறைத்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில், ‘நளினியை ஒருபோதும் விடுதலை செய்ய முடியாது. இதுதொடர் பாக நளினி அளித்த மனுவை மத்திய அரசு கடந்த 2018-ம் ஆண்டே நிராகரித்து விட்டது. ஒருவேளை இவர்களை விடுவித்தால் அது உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எனவே, இந்த வழக்கில் மத்திய அரசை யும் ஒரு எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்’ எனக் கோரினார்.

இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கில் மத்திய அரசையும் எதிர்மனுதார ராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜன.28-க்கு தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT