வரும் 11, 12-ம் தேதிகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை செய்ய விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.7), சென்னை ராணி மேரி கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுகலந்துகொண்டார். வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகளிடையே ஓவிய போட்டி உள்ளிட்டவை நடைபெற்றது. அதில் வரையப்பட்ட ஓவியங்களை சத்யபிரதா சாஹு பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, பேசிய அவர், "ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், ஜன.11, 12 ஆகிய தேதிகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னர் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனை நல்ல முறையில் வாக்காளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்தார்.