தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசி வரும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவைக் கைது செய்யவேண்டும், என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''டெல்லி ஜே.என்.யுவில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அரிவாள், உருட்டுக்கட்டை, இரும்பு பைப்புகள் போன்ற படுபயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு பல்கலை வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அமைதியாக உள்ள இந்தியாவில் மதத்தின் பெயரால் கலவரத்தைத் தூண்டி அதில் அரசியல் ஆதாயம் தேட பாஜகவினர் நினைக்கின்றனர். தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசி வரும் எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரை தமிழக அரசு கைது செய்யவேண்டும்.
அதுவும் மதக் கலவரத்தைத் தூண்டும்விதமாக பேசும் எச்.ராஜா போன்றவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிப்பது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.
நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுக அரசு பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றவர்களை மறைத்து ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து இருக்கிறார்கள். அப்படி அறிவிக்காத அதிகாரியை எம்எல்ஏக்கள் மேடையிலேயே அநாகரிகமாகப் பேசியுள்ளனர். இது அராஜகத்தின் உச்சம்''.
இவ்வாறு வேல்முருகன் பேசினார்.