தமிழகம்

எழுவர் விடுதலை வழக்கு; 2018-ம் ஆண்டே மறுத்துவிட்டோம்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்  

செய்திப்பிரிவு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரையும் விடுவிக்க முடியாதென 2018-ம் ஆண்டே முடிவெடுக்கப்பட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு புதிய மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், கடந்த 28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,000-த்திற்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்குப் பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாள் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை தன்னை விடுதலை செய்யாமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இன்று இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது.

அப்போது, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே ஏழு பேரையும் ஆயுள் தண்டனையிலிருந்து விடுவிக்க மறுத்து குடியரசுத் தலைவர் எடுத்த முடிவை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் தாக்கல் செய்த கடிதத்தில், 7 பேரை விடுவிக்கும் தமிழக அரசு முடிவு குறித்து 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதியிட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியதாகவும், அதில் மத்திய அரசின் முடிவை மத்திய உள்துறை இணைச் செயலாளரான வி.பி.துபே கடிதம் எழுதியுள்ளார்.

அதில், ஏழு பேரை விடுவிப்பது குறித்து மூன்று மாதத்தில் முடிவெடுக்க வேண்டுமென 2018 ஜனவரி 23-ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், அதன் பின்னர் பரிசீலித்து முடிவெடுத்துள்ளதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித வெடிகுண்டின் மூலம் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, காவல்துறையினர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட சம்பவம் என்பதாலும், அந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ எதிர்ப்பதாலும், சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாலும், எல்டிடிஇ அமைப்புடன் சேந்து கடுங்குற்றத்தைச் செய்தவர்களை விடுவித்தால் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்பதாலும் தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள முடியாது என மத்திய அரசு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன், இந்த வழக்கில் மத்திய அரசு எதிர் மனுதாரராக இணைக்கப்படாத நிலையில் ஆவணத்தைத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தை எதிர்மனுதாரராகச் சேர்த்து நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கு குறித்து மத்திய மாநில அரசுகள் மூன்று வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 28-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT