தமிழகம்

விஏஓ பணிக்கான 3-வது கட்ட கலந்தாய்வு: செப்டம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது

செய்திப்பிரிவு

கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான 3-வது கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு செப்டம்பர் 2-ம் தேதி தொடங்குகிறது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2013-14-ம் ஆண்டுக்கான கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த 14.06.2014 அன்று நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் 15.12.2014 அன்று வெளியிடப்பட்டன. இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மீதமுள்ள 660 காலிப்பணியிடங்களுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான அலகு ஒதுக்கீடு செப்டம்பர் 2 முதல் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய தற்காலிகப் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (>www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை, விரைவு தபால் மூலமாக தனியாக அனுப்பப்பட்டுவிட்டது.

விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப்பெண், தரவரிசை, இட ஒதுக்கீட்டு பிரிவு, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும் காலிப்பணி யிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT