தமிழகம்

சிதிலமடைந்த அரசுப் பள்ளி வகுப்பறைகள்: விபரீதம் ஏற்படுவதற்கு முன் அகற்ற கோரிக்கை

செய்திப்பிரிவு

பாலப்பட்டி அரசு ஆதி திராவிடர் நலத் துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள பழமை வாய்ந்த வகுப்பறைக் கட்டிடங்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எதிர்பாராத விபரீதம் ஏற்படுவதற்கு முன் அக்கட்டிடங்களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் ‘தி இந்து’ நாளிதழின் உங்கள் குரல் பகுதியில் கோரிக்கை விடுத்தனர்.

நாமக்கல் அருகே அலங்காநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது பாலப்பட்டி கிராமம். அந்தக் கிராமத்தில் அரசு ஆதி திராவிடர்நல துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். அரசு ஆதி திராவிடர் நல துவக்கப்பள்ளி கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஓட்டு வில்லைக் கட்டிடமாகும். அதில் நான்கு வகுப்பறை கட்டிடங்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில் உள்ளன.

மீதமுள்ள இரு வகுப்பறைக் கட்டிடங்களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் அமர வைக்கப்பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறது. போதிய இட வசதியில்லாத வகுப்பறை கட்டிடத்தில் மாணவர்கள் அமர வைக்கபட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் இடிந்த நிலையில் உள்ள வகுப்பறைக் கட்டிடத்தினுள் பள்ளி இடைவெளி நேரங்களில் மாணவர்கள் புகுந்து விளையாடுகின்றனர்.

அச்சமயங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தால் மாணவர்கள் பாதிக்கும் சூழல் ஏற்படும். எனவே சிதலமடைந்த நிலையில் உள்ள வகுப்பறைக் கட்டிடத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும். பள்ளிக்கும் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என, தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. எனினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘இந்தப் பள்ளியில் உயர்நிலை வகுப்புகளும் நடைபெற்று வந்தது. தற்போது உயர்நிலைப்பள்ளி தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் உள்ள ஒரு சில வகுப்பறைக் கட்டிடங்கள் சிதலமடைந்த நிலையில் உள்ளது. அந்த கட்டிடங்களை முற்றிலுமாக அகற்றிவிட்டு சுற்றுச்சுவர் கட்டித்தரும்படி ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது உள்ள கட்டிடங்கள் நல்ல நிலையில் உள்ளது. 30 மாணவர்களே படிப்பதால், இங்குள்ள வகுப்பறைக் கட்டிடங்களே போதுமானதாகும்’, என்றனர்.

SCROLL FOR NEXT