'என் மனைவியை திமுக.,காரங்க கடத்திட்டாங்க..' என சாக்கோட்டை 10-வது வார்டு கவுன்சிலர் தேவி மீனாளின் கணவர் ஒலிபெருக்கியில் புலம்பியதால் காரைக்குடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக தேவி மீனாள் வெற்றிபெற்றார்.
இந்நிலையில் இவரை சிலர் கடத்தி வைத்திருப்பதாக அவரது கணவர் ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் மகேந்திரன் தனது வீட்டைப் பூட்டி கொண்டு மனைவியை மீட்டுத் தருமாறு ஒலிபெருக்கி மூலம் பேசினார். இதனால் காரைக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அவர் புலம்பும் வீடியோ ஒரு சில நிமிடங்களில் வைரலானது. இதனையடுத்து அங்கு செய்தியாளர்கள் குவிந்தனர்.
அப்போது ஜன்னல் வழியாக நம்மிடம் பேசிய மகேந்திர, " எனது மனைவி மீனாள் தேவி 10-வது வார்டில் கை சின்னத்தில் வெற்றி பெற்றார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, தி.மு.க.,வோ இதற்கு முயற்சி செய்யவில்லை. முழுக்க, முழுக்க என்னுடைய முயற்சியாலேயே அவர் வெற்றி பெற்றார். இந்நிலையில், பதவியேற்பு விழா முடிந்ததும். என் மனைவியை தி.மு.க., கூட்டணி கட்சியினர் வேனில் கடத்திச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக காரைக்குடி டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தும் பயனில்லை இதனால் தற்போது ஒலி பெருக்கி மூலம் அனைவரின் உதவியை நாடியுள்ளேன்"என்றார்.
மகேந்திரனின் வீடியோ வைரலானது.
இந்நிலையில் மகேந்திரனின் மனைவி தேவி மீனாள் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில்...," என்னை யாரும் கடத்தவில்லை. நான் என் மகன் உடன் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளேன். என்னைப் பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது. யாரும் அதை நம்ப வேண்டாம்" எனத் தெரிவித்துள்ளார்.
மனைவி தேவி மீனாளின் வீடியோ வெளியான பின்னர் மகேந்திரன் வீட்டின் முன் திரண்டிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களை மகேந்திரன் தரக்குறைவாக விமர்சித்ததாக அவர் மீது செய்தியாளர்கள் சிலர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.