2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு வளர்பிறை எனவும், திமுகவுக்கு தேய்பிறை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் திமுக குறித்து விமர்சித்திருந்தார்.
அமைச்சரின் கருத்துக்கு பதிலளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "கடந்தாண்டு மக்களவையில் திமுகவின் பலம் என்ன? இப்போது 24 எம்.பிக்கள் இருக்கின்றனர். சட்டப்பேரவையில் 89 ஆக இருந்த திமுக பலம் இப்போது 100 ஆக அதிகரித்துள்ளது. 2011 -ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர்கள் 1,007 பேர் இருந்தனர். இப்போது ஒன்றிய கவுன்சிலர்கள் 2,100 பேர் இருக்கின்றனர். மாவட்ட கவுன்சிலர்கள் 30 பேர் முந்தைய தேர்தலில் இருந்தனர். இப்போது 243 பேர் இருக்கின்றனர். இது தேய்பிறையா? வளர்பிறையா? அபூர்வமான கருத்தை சொன்ன அமைச்சருக்கு இந்த கேள்வியைத்தான் கேட்க விரும்புகிறேன்" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று (ஜன.7) சென்னை, பட்டினப்பாக்கத்தில் இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "கடந்த மக்களவை தேர்தலில் வாங்கிய வாக்குகளையும், இப்போது உள்ளாட்சித் தேர்தலில் வாங்கிய வாக்குகளையும் ஒப்பிட்டு பார்த்தால், திமுகவின் வாக்கு வங்கி பெருமளவு சரிந்திருக்கிறது. அதைத்தான் நான் திமுகவுக்கு தேய்பிறை என்றும், அதிமுகவுக்கு வளர்பிறை என்றும் சொன்னேன். இதுதான் உண்மை.
என்னுடைய கணக்கு சரியாகத்தான் இருக்கிறது. அவர் எப்படியாவது மக்களை குழப்பி, திசைதிருப்பி ஒரு மாயையை உருவாக்கலாம் என நினைக்கிறார். திமுகவுக்கு வளர்ச்சி என்பதே இல்லை. இதேநிலை நீடித்தால் 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்" என தெரிவித்தார்.